கிழக்கு மாகாண கல்வியமைச்சருக்கு கிழக்கு ஊடக சங்கம் வாழ்த்து - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண கல்வியமைச்சருக்கு கிழக்கு ஊடக சங்கம் வாழ்த்து

Contributors
author image

Press Release

அரசியல் ஆதிக்க ஊடறுப்புக்களால் கல்வித்துறை சார் நிர்வாக சேவையிலுள்ள அதிகாரிகளும், ஆசிரிய மாணவ சமூகத்தினரும், பெற்றோரும், பாடசாலை நலன்விரும்பிகளும் பல்வேறு வகையான ஏமாற்றங்களையும், அசௌகரியங்களையும் தாங்கியவர்களாக இருப்பதை மறுக்க முடியாது. இவ்வாறான வேண்டத்தகாத தலையீடுகள் யாவும் தங்களின் பதவிக்காலத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டு நீதி, நேர்மையுடனான தங்களின் சேவையினை மனிதநேய அர்ப்பணிப்புடன் மேற்கொள்வீர்கள் என நாம் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளோம் என கிழக்கு மாகாண சபையின் கல்வி, காணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு. எஸ். தண்டாயுதபாணிக்கு கிழக்கு ஊடக சங்கம் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் மற்றும் செயலாளர் வீ. பத்மஸ்ரீ ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிழக்கு மாகாணத்தின் கல்வி, காணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளதனை எமது கிழக்கு ஊடக சங்கம் வரவேற்று தங்களை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றது.

 

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நீடித்திருந்த உள்நாட்டு யுத்த சூழ்நிலைகள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகள் காரணமாக எமது கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையானது வெகுவாகச் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்துள்ளது.

 

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் ‘தேசிய அரசாங்கம்’ எனும் புதியதொரு ஆட்சி மாற்றத்தில் கல்வித்துறை தொடர்பாக கோட்ட மட்டத்திலிருந்து மாகாண மட்டம் வரை நிறைவான அனுபவமும், ஆற்றலும், தகுதியும், தரமும் நிறைந்த தாங்கள் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது எமது பார்வையில் அபரிமிதமான நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது.

 

கல்வித்துறை சார்ந்த தங்களின் கடமைக் காலத்தின்போது இன, மத, பிரதேச பேதங்கள் பாராது தாங்கள் சேவையாற்றியதை எமது சங்கம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறே இம்மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மாணவ சமூகத்தினருக்கு பாரபட்சமற்ற வகையிலான தங்களின் நிறைவான சேவைகள் கிடைக்கும் என்பதிலும் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

 

ஒரு சமூகத்தின் உண்மையான அபிவிருத்தி என்பது, அச்சமூகத்தின் கல்வி மற்றும் அறிவியல் மேம்பாட்டில்தான் தங்கியுள்ளது. ஒவ்வொரு மாணவரும் நிறைவான கல்வியின் மூலம் அறிவையும், ஆற்றலையும் பெறுவதினூடாக அவர்கள் சார்ந்த குடும்பங்களிலும், சமூகங்களிலும், பிரதேசங்களிலும் அறிவியல் ரீதியான அபிவிருத்தி புத்தெழுச்சியடைந்து வியக்கத்தக்க மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அடைந்து கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. அந்த வகையில் எமது தேசத்தின், மாகாணத்தின் எதிர்காலத் தலைவர்களாக விளையவுள்ள அடுத்த சந்ததியினரின் முழுமையான அபிவிருத்தி என்பது கல்வியில் ஏற்படும் மறுமலர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்பதே எமது சங்கத்தின் எதிர்பார்ப்பும், நிலைப்பாடுமாகும்.

 

எமது மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள பாடசாலைகளிலும், கல்விச்சேவை நிர்வாகத்திலும் கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கானது பல தரப்பினராலும் பல்வேறு வகைகளில் ஊடறுத்துள்ளதால் சில பாடசாலைகள் மிக உச்ச நிலையிலும், அதிகமான பாடசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுவது வெளிப்படையான விடயமேயாகும்.

 

இத்தகைய அரசியல் செல்வாக்கு ஆதிக்க ஊடறுப்புக்களால் கல்வித்துறை சார் நிர்வாக சேவையிலுள்ள அதிகாரிகளும், ஆசிரிய மாணவ சமூகத்தினரும், பெற்றோரும், பாடசாலை நலன்விரும்பிகளும் பல்வேறு வகையான ஏமாற்றங்களையும், அசௌகரியங்களையும் தாங்கியவர்களாக இருப்பதையும் மறுக்க முடியாது.

 

இவ்வாறான வேண்டத்தகாத தலையீடுகள் யாவும் தங்களின் பதவிக்காலத்தில் முழுமையாக ஒழிக்கப்பட்டு நீதி, நேர்மையுடனான தங்களின் நேர்சீர் பார்வையிலமைந்த சேவையினை மனிதநேய அர்ப்பணிப்புடன் மேற்கொள்வீர்கள் என நாம் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

 

தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள இப்பாக்கியமான பொறுப்புமிக்க அமைச்சுப் பணியினை செவ்வனே மேற்கொள்வதற்கு சகலவிதமான சௌபாக்கியங்களையும், சரீர சுகத்தையும் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்குத் தந்தருள வேண்டுமெனவும் எமது சங்கம் இத்தருணத்தில் பிரார்த்திக்கின்றது என அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team