கிழக்கு மாகாண நீர் அபிவிருத்தித் திட்டத்தில் இடம்பெற்ற மோசடியினால் ஆறு கோடி ரூபா நஷ்டம் - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண நீர் அபிவிருத்தித் திட்டத்தில் இடம்பெற்ற மோசடியினால் ஆறு கோடி ரூபா நஷ்டம்

Contributors

ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் 2013 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கிழக்கு மாகாண நீர் அபிவிருத்தித் திட்டத்துக்காக DI குழாய்கள் மற்றும் துணைக் கருவிகளை இறக்குமதி செய்யும்போது இடம்பெற்ற மோசடி காரணமாக 62,499,656 ரூபாவை அரசாங்கம் மேலதிகமாகச் செலுத்த வேண்டி ஏற்பட்டதாக அண்மையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் குழுவில் புலப்பட்டது.

இத்திட்டத்துக்குத் தேவையான DI குழாய்கள் மற்றும் துணைக் கருவிகளை இறக்குமதி செய்யும் பொறுப்பு திறைசேரியினால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு வழங்கப்பட்டதுடன், இதற்கான ஒப்பந்தத்தை அக்சஸ் இன்டர்நஷனல் தனியார் நிறுவனத்துக்கு (M/S Access International (Pvt)Ltd) சபை வழங்கியிருந்தது.

இந்தப் பொருட்களுக்கு வரியைச் செலுத்தாது களஞ்சியக் கிடங்கில் வைப்பதற்கு சுங்கத் திணைக்களம் அனுமதி வழங்கியிருந்ததுடன், இதற்காக 08 சுங்கப் பிரகடனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 5,139,621 அமெரிக்க டொலராக இருந்தபோதும், அவற்றை களஞ்சியத்திலிருந்து விடுவிக்கும்போது தேசிய ரீதியில் தயாரிக்கப்பட்ட பற்றுச்சீட்டில் மொத்தப் பெறுமதி 6,350,364 அமெரிக்க டொலர்கள் எனப் போலியான தகவல்கள் குறிப்பிடப்பட்டு விடுவிக்கப்பட்டமையால் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் 1,207,098 டொலர் இலாபத்தைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.

இதற்கும் அப்பால், போலியான பற்றுச்சீட்டு தயாரித்தமை, போலியான தகவல்களை வழங்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி மோசடியாகப் பெறப்பட்டுள்ள நிலையில், இதனை விசாரணை செய்த சுங்கத் திணைக்களம் இது அக்சஸ் நிறுவனத்தின் தவறு இல்லையென விசாரணையை முடிவுக்குக் கொண்டுவந்தமை குறித்தும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கவனம் செலுத்தியது.

இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்குப் புதிய குழுவொன்றை நியமித்திருப்பதாகவும், இந்த விசாரணை அறிக்கையை ஏப்ரல் 01ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும் என்றும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், நுரைச்சோலையில் உள்ள அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியை வழங்குவதற்கு நான்கு அரசாங்க நிறுவனங்களின் (வரையறுக்கப்பட்ட கப்பல் கூட்டுத்தாபனம் 10%, இலங்கை மின்சார சபை 60%, இலங்கை துறைமுக அதிகார சபை 10 %, திறைசேரி 20%) உரிமையைக் கொண்டுள்ள லங்கா கோல் கம்பனி பிறைவட் லிமிடட் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தினால் 2016ஆம் ஆண்டில் நிலக்கரியை இறக்குமதி செய்த 66 சந்தர்ப்பங்களில் நிலக்கரிகளின் CIF பெறுமதி தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்தாமையால் அரசாங்கம் வசூலிக்க வேண்டிய 187 மில்லியன் ரூபா வற் வரி தொடர்பிலும் கோபா குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இதில் வற் வரி சரியான முறையில் கணிப்பிடப்பட்டு சுங்கப் பதிவுகளில் குறிப்பிடப்படாமையால் அரசாங்கத்தினால் வற் வரி செலுத்துவது தொடர்பில் நடத்தப்பட்ட சுங்க விசாரணைகளுக்கு அமைய குறைவாகக் கணிப்பிடப்பட்ட வற் வரிப் பெறுமதியான 205 மில்லியன் ரூபா, மேலதிக வரியாக அறவிடப்படாமல் தண்டப்பணமாக அறிவிட்டமையால் குறித்த தண்டப் பணத்தில் 50 வீதம் அல்லது 102.5 மில்லியன் ரூபா அதிகாரிகளுக்கான பரிசாக வழங்கப்பட்டமை, மேலும் 20 வீதம் அதாவது 41 மில்லியன் ரூபா அதிகாரிகளின் நலன்புரிக்கான நிதியத்துக்கு வழங்கப்பட்டமை, அரசாங்கத்தின் வருமானத்தில் 61.5 மில்லியன் சேர்க்கப்பட வேண்டியுள்ளமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது.

இது தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு கோபா குழு, திறைசேரியின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டது. இவ்வாறான மோசடிகள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருக்கும் வகையில் சுங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகிவண்ண, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, வைத்தியகலாநிதி உபுல் கலப்பதி, வீரசுமன வீரசிங்ஹ, கலாநிதி ஹரினி அமரசூரிய, நிரோஷன் பெரேரா, கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team