கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரை கட்சியே முடிவு செய்யும். - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளரை கட்சியே முடிவு செய்யும்.

Contributors

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு கட்சி தான் முடிவு செய்யும் எனவும் எமது கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலை மேற்கொள்ளவே தான் வருகை தந்துள்ளதாக மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்றங்களுக்கான முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித்தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு இன்று(8) விஜயம் செய்த அவர் சாய்ந்தமருது பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முஸ்லிம் பிரதேச அமைப்பாளர்களை சந்தித்து சமகால அரசியல் நிலைகள் தொடர்பாகவும் அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் சுதந்திர கட்சியை வலுப்படுத்தும் இக்கலந்துரையாடலில் அமைப்பாளர்கள் சிலர் அவரை எதிர்வரும் கிழக்கு மாகாண தேர்தலில் முதலமைச்சராக களமிறங்க வேண்டும் என ஒரு முன்மொழிவை முன்வைத்திருந்ததுடன் இவ்வாறு போட்டியிடுவதன் ஊடாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தியை தொடர முடியும் என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் தைரியமானவராகவும் முஸ்லிங்களின் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அரசியலில் நிறைய அனுபவங்களை கொண்டவர். அவர் கிழக்கில் போட்டியிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றால் முஸ்லிங்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தற்போதைய எனது விஜயமானது எமது கட்சியின் மறுசீரமைப்பு விடயத்துடன் சம்பந்தமானது.எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதை கட்சி தான் முடிவெடுக்கும் என கூறியதோடு தற்போதைய அரசாங்கத்தில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் பேச்சுவார்த்தை ஒன்றின் ஊடாக அவற்றை தீர்வு கண்டு முன்னோக்கி செல்ல முடியும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் , முன்னாள் உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team