கிழக்கு முஸ்லிம்களுக்கு பதில் சொல்வாரா ஹக்கீம்? » Sri Lanka Muslim

கிழக்கு முஸ்லிம்களுக்கு பதில் சொல்வாரா ஹக்கீம்?

hakee

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அமீர் மௌலானா


கடந்த ஜனாதிபதி தேர்தல்களின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்றுவோம் என்ற வாக்குறுதியினை மக்களுக்கு வழங்கியே ஒவ்வொரு தடவையும் ஜனாதிபதி ஆசனம் வெற்றி கொள்ளப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனவும் அந்த வழியிலேயே வந்தவராவார், காலங்கள் கடந்ததே தவிர பாரிய மாற்றங்கள் எதுவும் இன்னும் செய்யப்படவில்லை என்ற குரலோடு, ஜனாதிபதி தேர்தல் முறையினை மாற்றியமைத்து, பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறையினையைக் கொண்டு வர வேண்டும் என 20 வது திருத்தச் சட்டமூலத்தினை ஜே.வி.பி யானது பாராளுமன்றத்தில் முன்வைக்கிறது.

இதனை விமர்சித்து பேசிய ஹக்கீம், அவரது மனதில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலக்கின் சாராம்சத்தின் சாற்றினை கசிய விட்டுள்ளார் என்பதை.“20 வது திருத்தச் சட்ட மூலமானது இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட முழுமையாக திருத்தப்படும் பட்சத்திலேயே நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என்ற ஹக்கீமின் கருத்தானது உறுதிப்படுத்துகிறது.

எமது நாட்டில் தமிழ், சிங்கள சமூகங்களுக்கிடையில் நீண்ட காலமாக காணப்படும் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு பல உபாயங்கள் பல தரப்பினரால் கூறப்பட்டாலும், பயங்கரவாதம் தலை விரித்தாடிய காலப் பகுதியில் முஸ்லீம்கள் இந்த இரு தரப்பினராலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில் மரத்தால் விழுந்த கிழக்கு மாகாணத்தானை மாடு குத்திய கதையாக, கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் மறைத்து, மறந்து வாழுகின்ற ஹக்கீமாலும் மூன்றாம் தரப்பாக முஸ்லீம்களுக்கு பிரச்சனைகள் வந்துவிடக் கூடாது என முஸ்லீம்கள் யோசிப்பதும், கேட்பதும் நியாயமானமானது என்று தான் கூற வேண்டும்.

ஏற்கனவே 18 மற்றும் 19 வது சட்டமூலங்களில் சில திருத்தங்களுக்கு மாத்திரம் கை தூக்கி அலுத்துப் போன ஹக்கீம், 20 வது திருத்தச் சட்டமூல விடயத்தில் மிகவும் இலாபகரமாக தனது விசுவாசத்தினை யாரோ ஒரு எஜமானனுக்கு காட்டியுள்ளார் எனலாம். ஆனால் அவரை நம்பியுள்ள கிழக்கு மக்களுக்கு “சொல்வது ஒன்று செய்வது ஒன்று” என அரசியல் மகுடத்தை சூட்டிக்கொண்டுள்ள ஹக்கீமின் செயற்பாட்டு நடத்தை தத்துவமானது இவ்விடயத்தில் மாத்திரம் விதிவிலக்காக இருக்க முடியாது.

எனவே இங்கு ஹக்கீமின் இந்த இனப்பிரச்சினை தொடர்பான கருத்தானது பல்வேறு கோணங்களில் மக்களை சிந்திக்க வைத்துள்ளதுடன். அதற்கான விளக்கத்தினை ஹக்கீம் தெளிவு படுத்த வேண்டும் என்பது கிழக்கு மக்களின் கேள்வியுமாகும்.

ஹக்கீம் இனப்பிரச்சனை தொடர்பான தீர்வுக்கு எந்த வகையான, யோசனைகளையும், திட்டங்களையும் அரங்குக்கு கொண்டு வருவார் என்பதுடன், முஸ்லீம்களையும், அவர்களது பாரம்பரிய, கலாச்சார, விழுமியங்களையும், எதிர்கால சந்ததிகளின் அபிலாசைகளையும், வதிவிட, காணிப் பிரச்சனைகளையும், முஸ்லிம்களுக்கான நிருவாக முறைகளையும், சட்டங்களையும், பாதுகாக்கும் அம்சங்களையும் ஹக்கீமால் முன்வைக்கப்படும் அல்லது சொல்லப்படும் முழுமையான தீர்வுத திட்டம் உள்ளடக்குமா? என சிந்திக்க வைத்துள்ளதுடன், இவ்வாறாரான யோசனைகளை ஹக்கீமால் முன்வைக்கப் படாத பட்சத்தில், ஹக்கீம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தீர்வுத் திட்டத்துக்கு கை தூக்குவாரா? அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்வுத் திட்டத்துக்கு கை தூக்குவாரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீர்வுத் திட்டத்துக்கு கை தூக்குவாரா? அல்லது சம்பந்தன் ஐயாவின் தீர்வுத் திட்டத்துக்கு கை தூக்குவாரா? அல்லது டயஸ்போராவின் தீர்வுத் திட்டத்துக்கு கை தூக்குவாரா? என்பதில் கிழக்கு மக்கள் இன்று குழப்பமடைந்து காணப்படுகின்றனர் .

ஹக்கீம் எப்பொழுதும் அரசியலை பண்டமாற்று வியாபாரக் கலையாக செயற்படுத்தி, இலாபகரமான தொழிலுக்கு தனது கவனத்தை செலுத்தக் கூடியவர் என்பதால், கிழக்கு மாகாண முஸ்லீம்களுக்கு மாத்திரமல்ல நாட்டிலுள்ள சகல முஸ்லீம்களுக்கும் பாதிப்புக்கள் பல பக்கங்களினாலும் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முகமாக ஹக்கீமிடம் இதற்கான பதிலை எதிர்பார்ப்பது காலத்தின் கட்டாயமாகவும் காணப்படுகிறது.

கடந்த கால சம்பவங்களான ஜனாதிபதித் தேர்தலின் போது, 18 மற்றும் 19 வது போன்ற திருத்தச் சட்டத்தின் போது, பிரதேச சபை, மாகாண சபை திருத்தச் சட்டத்தின் போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது, நோர்வே பேச்சுவார்த்தையின் போது என பல்வேறு சந்தர்ப்பங்களில் ஹக்கீம் பணம் பெற்றார் என்ற கதைகள் இன்றும் பரவலாக பேசப்படுகிறது.

வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கூறுகையில் ஹக்கீமின் ஏற்பாட்டில் ஹக்கீம் உட்பட சகலருக்கும் பணம் கொடுக்கப்பட்டது என தெரிவித்து இருந்தார். அண்மையில் பாராளுமன்றத்தில் அனுராகுமார திசாநாயக்க, விமல் வீரவன்ச போன்றவர்களினால் ஹக்கீம் பணம் பெற்ற கதைகளை தெளிவாக் கூறி குற்றம் சுமத்தினார்கள். ஹக்கீமின் ஏற்பாட்டில் ஹக்கீம் பெறப் போகும் தங்க முட்டையைப் போல் தானும் பெற வேண்டுமென்ற ஆசையில் பைசல் ஹாசிமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தேவை என்றும், 20 வது திருத்தச் சட்டமூலத்தில் இது உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் ஹக்கீம் சொல்லிக் கொடுத்த படி பாராளுமன்றத்தில் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டதையும் ஞாபகப் படுத்த வேண்டியுள்ளது,

அது மட்டுமல்ல ஒரு கூட்டத்தில் பிரதியமைச்சர் ஹரீஸ் பேசும் போது தலைவர் ஹக்கீம் பல பரம்பரைக்கு சொத்துக்களைக் கொண்டுள்ள செல்வந்தர் என தெரிவித்திருந்த கதைகள் பத்திரிகைகளில் வந்ததையும் நாம் மீட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் தாருஸ்ஸலாம் சொத்து மோசடியில் ஹக்கீமுக்கும் சம்பந்தம் இருப்பதை நசீர் அகமட் மீது தொடரப்பட்டுள்ள தாருஸ்ஸலாம் சொத்து வழக்கானது தெளிவு படுத்துகிறது.

இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு சொத்துக்கள் ஹக்கீமுக்கு இருக்கின்றது என்ற சுட்டிக் காட்டுதலுடன். கார்னிவேலினை சுற்றியுள்ள சகல காணிகளும் ஹக்கீமால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உலாவருகின்றது.

இவ்வாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்களைக் கொண்டுள்ள ஹக்கீம் ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையினைக் கொண்டிருந்த  ஆசிரியரின் மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே மக்களின் சந்தேகங்களுக்கு இவ்வாறான தகவல்கள் சாதகமான சமிக்ஞையினை காண்பிக்கிறது என்பதை மிகத் தெளிவாக கூறலாம்.

எமது நாட்டில் இனப்பிரச்சனையால் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி ஐ. நா. சபை பிரதிநிதி நவநீதம் பிள்ளையிடம் அறிக்கையினை சமர்ப்பித்ததாக முன்னாள் செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலி மீது கோபமடைந்த ஹக்கீம் அன்றைய ஜனாதிபதியிடம் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் எல்லாம் ஹஸனலி செய்த வேலை என்றும் போட்டுக் கொடுத்ததோடு, இவ்வாறான வேலைகளினால் சமூகத்துக்காக தொடர்ந்து ஹஸனலி குரல் கொடுத்து மக்களுக்காக செயற்படுவது தனது எதிர்கால இருப்புக்கும், உழைப்புக்கும் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பயந்து கட்சியை விட்டு ஹஸனலி வெளியேற ஹக்கீம் திட்டமிட்டு செயல்பட்டத்தையும் மறைக்க முடியாது.

VC இஸ்மாயில் பாராளுமன்றம் சென்றால் தனது காதை அறுப்பேன் என்று சவால் விட்ட ஹக்கீம் அவருடைய காதை அறுப்பாரா? இது போல் எவ்வளவோ வீராப்பான பேச்சுக்களை அனல் பறக்க பேசியும், வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வீசியும், ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்களின் வாக்குகளை பெற்றாரே தவிர, முடிவுகள் யாவும் வெறும் புள்ளிகளாகவே என்றும் காணப்படுகிறது.கிழக்குக்கு ஒரு கேபினெட் அமைச்சினை பெற்றுக் கொடுக்க விருப்பமில்லாத ஹக்கீம், கிழக்கு முஸ்லீம்களால் வாழ்ந்து கொண்டு முஸ்லீம்கள் அதிகமாக வாழும் அம்பாறைக்கு ஒரு முஸ்லீம் அரசாங்க அதிபரை பெற்றுக் கொடுக்க முடியாத, இலங்கையில் ஒரு முஸ்லீம் ஆளுநரை நியமிக்க இயலாத ஒருவராகவே காணப்படுகிறார்.

ஆனால் பெருந் தலைவர் அஷ்ரபினால் தூரநோக்கு சிந்தனையுடன் கூறப்பட்ட முஸ்லிம்களுக்கென்ற தீர்வான “கரையோர மாவட்டம் அல்லது நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு” எனும் முடிவிற்கு மாறாக வேறு தீர்வுத் திட்டங்களுக்கு சம்மதித்து விட்டு “ஒன்றைக் காட்டி ஒன்றை செய்து என்னை ஏமாற்றி விட்டார்கள், நானும் தவறுதலாக கை உயர்த்தினேன் அல்லது ஒப்பமிட்டேன்” என ஹக்கீம் சொன்னால் கிழக்கு மக்களின் நிலை என்னவாகும்? என்பதும் ஒரு அபாயச் சங்காகவே உள்ளது. அத்துடன் இவ்வாறான போக்கு வாழையடி வாழையாக நாம் ஹக்கீமிடம் காணுகின்ற ஒரு சித்து விளையாட்டுமாகும்.

எனவே மக்கள் நிச்சயமாக இவ்விடயத்தில் விழிப்புடன் இருப்பார்கள் என்பதும் இருக்க வேண்டும் என்பதும் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் முஸ்லீம்கள் விழித்துக் கொண்ட பாடமாக இக்கேள்வியானது எழுவது நியாயமானதே! .

Web Design by The Design Lanka