குப்பையில் சிக்கிய முகவரிகளினால் கல்முனை மாநகரில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை..! - Sri Lanka Muslim

குப்பையில் சிக்கிய முகவரிகளினால் கல்முனை மாநகரில் சிலர் மீது அதிரடி சட்ட நடவடிக்கை..!

Contributors

நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர சபையினால் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த குப்பைகளில் இருந்து பெறப்பட்ட முகவரிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க உள்ளோம் என கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்த குப்பைகளினால் மக்கள் அசௌகரியம் எனும் இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கிபின் ஆலோசனையின் பேரில் கள விஜயம் செய்த டாக்டர் அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதார குழுவினர் அந்த குப்பைகளை அகற்றிய போது அந்த குப்பைகளிலிருந்து மின்சார சபை நிலுவைப் பட்டியல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலுவைப் பட்டியல், டெலிகொம் நிலுவைப் பட்டியல் உட்பட முகவரி அச்சிடப்பட்ட ஆவணங்களை கைப்பற்றினர். குப்பைகள் கொட்டப்பட்ட 23 இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கல்முனையில் இருந்து 20 பேரின் முகவரியும், சாய்ந்தமருதில் இருந்து 23 பேரும், மருதமுனையில் இருந்து 18 பேரும், நற்பிட்டிமுனையில் இருந்து 17 பேருமாக அந்த முகவரிகளை அடிப்படையாக கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளானர். அந்த 78 பேருக்கும் எதிராக பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்தமைக்காக நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த போவதாக அங்கு கருத்து தெரிவித்த போது பிரதம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இங்கு கல்முனை மாநகர சபை சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team