கூகுள்- சாம்சங் நிறுவனங்களுக்கிடையே உலகளாவிய காப்புரிமை ஒப்பந்தம் - Sri Lanka Muslim

கூகுள்- சாம்சங் நிறுவனங்களுக்கிடையே உலகளாவிய காப்புரிமை ஒப்பந்தம்

Contributors

qout67

தகவல் தொழில்நுட்பத்துறையின் பெருநிறுவனங்களான சாம்சங்கும், கூகுளும் அறிவுசார் தொழில்நுட்ப சொத்துகளின் மீது இரு நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும்பொருட்டும், செலவுமிகுந்த சட்ட மோதல்களின் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது அடுத்த பத்தாண்டுகளில் பெறவிருக்கும் காப்புரிமைகள் மீதும், தற்போது நடைமுறையில் உள்ள காப்புரிமைகள் மீதும் செல்லுபடியாகும் என்று சாம்சங் நிறுவனம் இன்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்த நிதி விதிமுறைகள் அறிக்கைகளில் வெளியிடப்படவில்லை.

இரு நிறுவனங்களுக்கிடையேயான இந்த உடன்பாடு சட்டரீதியான மோதல்களைக் குறைத்து கண்டுபிடிப்புகள் மீதான கவனத்தை அதிகரிக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் துணை பொது வழக்கறிஞரான ஆலன் லோ தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பிற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கின்றது என்று சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பில் ஏற்கனவே இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிற்கான மெமரி சிப்ஸ் போன்ற முக்கியமான தொழில்நுட்பக் கூறுகளை தயாரிப்பதில் சாம்சங் முன்னணியில் உள்ளது. அதுபோல் இணையதளத் தேடலில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் வர்த்தகரீதியாக அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் ஆண்டிராய்ட் போன்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.

இந்த புதிய ஒப்பந்த அறிவிப்பின்மூலம் கூகுள் நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஹார்டுவேர் தொழில்நுட்ப பங்குதாரராக சாம்சங் நிறுவனம் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நொமுரா நிதி முதலீட்டின் ஆய்வாளரான சுங் சங் வான் தெரிவித்துள்ளார்.

 

தங்களுடைய காப்புரிமம் கொண்ட தொழில்நுட்ப நிறுவன உத்திகளை பிற நிறுவனங்கள் பின்பற்றும்போது பொதுவாக வழக்குகள் மூலமே இத்தகைய பிரச்சினைகள் சந்திக்கப்படும். ஆனால் பல வழக்குகள் இதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே குறுக்கு உரிமம் குறித்த உடன்பாடுகள் பெறப்படுவதோடு முடிந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team