கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் - ஏ.எம். ஜெமீல் - Sri Lanka Muslim

கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – ஏ.எம். ஜெமீல்

Contributors

வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபைக் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ள சமிக்ஞையைக் கருத்திற் கொண்டு சாதகமாக பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

“வடக்கு – கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணம் இணக்கம் தெரிவித்தால் நிச்சயம் அதை நிறைவேற்றுவோம்” என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு விடுத்துள்ள நிலையில், இதுதொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன என வினவியபோது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் சிறுபான்மையின சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்துவது தொடர்பான சாதகமான சமிக்ஞையை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காட்டியுள்ளனர். 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி எமது பொறுப்புணர்வை வெளிக்காட்டியுள்ளோம்.

சிறுபான்மை மக்களின் நலன்கருதி நாம் நேசக்கரம் நீட்டியுள்ள நிலையில், அதனைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது. சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க இரு தரப்பினரும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்யவேண்டும். சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புக்கும் எமக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.

அப்போதுதான் வடக்கு – கிழக்கு இணைப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரம் குறித்தும் சாதகமாகப் பரிசீலிக்கலாம். இதற்காக நாம் நீட்டியுள்ள நேசக்கரத்தைப் பற்றிக்கொண்டு கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team