கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் » Sri Lanka Muslim

கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில்

india

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

கேரளாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில், பிஹாரை சேர்ந்த யாஸ்மீன் முகம்மது ஜாஹீத்துக்கு எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கேரளாவில் கடந்த 2016-ல் காணாமல்போன 21 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக பரபரப்பு உருவானது. இதில் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்காக சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தான் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கை பின்னர் என்ஐஏ விசாரித்தது. இதில் காசர்கோடு மாவட்டத்தில் அப்துல் ரஷீத் அப்துல்லா என்பவர் ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து வந்ததும் நிதி திரட்டி வந்ததும் தெரியவந்தது. இவரது செயல்பாடுகளுக்கு மலப்புரத்தில் ஆசிரியையாக பணியாற்றிய பிஹார் பெண் யாஸ்மீன் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், யாஸ்மீன் தனது குழந்தையுடன் ஆப்கானிஸ்தான் செல்ல முயன்றபோது டெல்லி விமான நிலையத்தில் கடந்த 2016, ஜூலை 30-ம் தேதி கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கை எர்ணாகுளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி அப்துல்லா, இரண்டாவது குற்றவாளி யாஸ்மீனுக்கு எதிராக என்ஐஏ கடந்த ஆண்டு ஜனவரியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் யாஸ்மீன் குற்றவாளி என சிறப்பு நீதிபதி எஸ்.சந்தோஷ் குமார் அறிவித்தார். யாஸ்மீனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.முதன்மை குற்றவாளி அப்துல்லா தற்போது ஆப்கானிஸ்தானில் இருப்பதாக நம்பப்படுகிறது. கேரளாவில் ஐ.எஸ். தொடர்பான வழக்கில் வெளியான முதல் தீர்ப்பு இதுவாகும்.

Web Design by The Design Lanka