கேரள முதல்வரின் கார் மீது சரமாரியான கல்வீச்சு! - கண்ணாடிகள் நொருங்கி உம்மன்சாண்டி நெற்றியில் காயம். - Sri Lanka Muslim

கேரள முதல்வரின் கார் மீது சரமாரியான கல்வீச்சு! – கண்ணாடிகள் நொருங்கி உம்மன்சாண்டி நெற்றியில் காயம்.

Contributors

கண்ணூரில் முதல்வர் கேரள முதல்வர் கார் மீது இடது முன்னணி தொண்டர்கள் நேற்று கல் வீசி தாக்கினர். இதில் கண்ணாடி உடைந்து உம்மன் சாண்டியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. நேற்று மாலை 5.45 மணியளவில் கண்ணூரில் நடந்த போலீஸ் தடகள போட்டி நிறைவு விழாவில் கலந்து கொள்தற்காக உம்மன்சாண்டி சென்றார். அப்போது இடது முன்னணியினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதையடுத்து, கண்ணூர் மாவட்ட எஸ்பி ராகுல் ஆர் நாயர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பேராட்டம் நடத்த வந்த இடது முன்னணி தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது உம்மன்சாண்டி காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தார். நாலாபுறமும் இருந்து திடீரென அவரது காரை நோக்கி கற்களை வீசப்பட்டன. இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. கண்ணாடி சிதறல்கள் நெற்றியில் விழுந்ததில் உம்மன் சாண்டி காயமடைந்தார். போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காயத்துடன் உம்மன்சாண்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பினராய் விஜயன் கூறுகையில், உம்மன்சாண்டி மீது நடந்த தாக்குதலுக்கும் எங்கள் கட்சியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். இதையடுத்து கேரளா முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர். திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team