கொச்சைப்படுத்தப்பட்டது சாய்ந்தமருது மக்களின் உணர்வுகள் மாத்திரமல்ல » Sri Lanka Muslim

கொச்சைப்படுத்தப்பட்டது சாய்ந்தமருது மக்களின் உணர்வுகள் மாத்திரமல்ல

sainthamaruthu

Contributors
author image

Editorial Team

சாய்ந்தமருது மக்கள் தனியான உள்ளூராட்சி மன்றம் கேட்டு, நடு வீதியில் கூட பல நாட்கள் இருந்துவிட்டார்கள். இப்படி ஒரு ஊரின் தாகமான தனியான உள்ளூராட்சி மன்ற விடயத்தில், அந்த மக்கள் வாக்களித்த ஒரு கட்சியின் தலைவர் மிகவும் கரிசனை கொண்டு செயற்பட வேண்டும்.

அமைச்சர் ஹக்கீமோ அது விடயத்தில் பிரதமர் ரணிலின் வாக்குறுதியை மலினப்படுத்தி, ஒரு நையாண்டிப் போக்கில் கதைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இவரின் கரிசனையற்ற செயற்பாட்டின் காரணமாகத் தான், இரு ஊர் மக்கள் தங்களுக்குள் தீராத பகையை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இது தான் ஒரு கட்சித் தலைவரின் பண்பா..?

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானதா என்பதற்கு அப்பால், அது அம் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. அதனை நையாண்டிக்குட்படுத்துவது சாய்ந்தமருது மக்களை அவமானப்படுத்துவதற்கு ஈடாகும். சாய்ந்தமருது மு.காவின் கோட்டையாகும். யார்…? என்ன செய்தாலும்…? அவர்கள் சிறிதும் அசைய மாட்டார்கள்.

அப்படியான மக்களின் தாகத்தை, மு.காவின் தலைமை ஒரு விளையாட்டுப் பொருளாக  கொண்டுள்ளமையானது, அத் தலைமை ஏனைய விடயங்களில், எவ்வாறு கரிசனை கொண்டு செயற்படும் என்பதை அறிந்து கொள்ளச் செய்யும். பூரணமாக தங்களை ஆதரிக்கும் மக்களின் தேவைகள் மீது கரிசனை கொள்ளாத அமைச்சர் ஹக்கீம் , ஏனைய மக்கள் விடயத்தில் எப்படி கரிசனை கொள்வார்.

அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளை நையாண்டிக்குட்படுத்துவதன் மூலம், அவர் ஏனைய மக்களின் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம். காலம் பிந்திய ஞானத்தில் எந்த வித பிரயோசனமும் இல்லை.

இதன் மூலம் அமைச்சர் ஹக்கீமின் வாக்குறுதிகள் தேர்தலை மையமாக கொண்டு வழங்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளலாம். தேர்தலை மையமாக கொண்டு, வாக்குறுதி வழங்குபவர் ஒரு போதும் உண்மையான தலைவனாக இருக்க முடியாது.

Web Design by The Design Lanka