கொதிக்கிறது யாப்பு சிபார்சு! பௌத்தத்தில் மஹிந்த பிரிவு! » Sri Lanka Muslim

கொதிக்கிறது யாப்பு சிபார்சு! பௌத்தத்தில் மஹிந்த பிரிவு!

Cartoon-Constitution

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

புதிய யாப்பு சிபார்சுகளில் பௌத்தத்திற்கு மேலும் முன்னுரிமை!
மைத்திரி – மஹிந்தவை இணைக்கும் இறுதி முயற்சியில் சு.க!
ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்து நடக்கும் பனிப்போர்!


புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளை ஒரு அரசியல் யாப்புப்போல் பேரின சமூகத்திற்கு காட்சிப்படுத்தி சிங்கள மக்களை உசுப்பேற்றி விடுகின்ற காரியத்தை ராஜபக்ஷவாதிகள் தற்போது முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதற்காக அவர்கள் கடும்போக்கு காவி உடைக்காரர்களையும் இனவாத அமைப்புக்களையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கின்றார்கள். இவர்களுடைய இந்த நடவடிக்கைகள் காரணமாக பௌத்த குருமாரிடத்தில் இன்று பாரிய பிளவுகள் தோன்றி இருக்கின்றது. இது எந்தளவுக்கு உச்சத்தில் இருக்கின்றது என்றால் பௌத்த சமயத்தில் ராஜபக்ஷ பிரிவு என்று ஒன்று புதிதாகத் தோன்றி இந்த நாட்டை அது நாசம் செய்து விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கின்றது.

அவர்களின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அண்மையில் மல்வத்தை பீடாதிபதி கடுமையான கேள்விகளை தினேஷ் குனவர்தனவிடம் எழுப்பி இருந்தார். இது ராஜபக்ஷ விசுவாச பௌத்த குருமாருக்குப் பெரும் கோபத்தை உண்டு பண்ணி இருக்கின்றது. இதனால் இதுவரை முக்கிய பௌத்த பீடாதிபதிகளை விமர்சிக்காதிருந்த மஹிந்த ஆதரவு பிக்குகள் இப்போது மல்வதை பீடாதிபதியை நேரடியாக விமர்சிக்கத் துவங்கி இருக்கின்றார்கள். அத்துடன் தமிழ் கூட்டமைப்பு தேசிய பட்டியலில் அந்தப் பீடாதிபதி பாராளுமன்றம் போக முயல்கின்றார்கள் என்று விமர்சித்து வருகின்றார்கள். இது கடுமையான விமர்சனம்.

இந்த யாப்பை உருவாக்க முக்கிய பங்கு வகிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்கிரமரத்ன தற்போதய அரசியல் யாப்பில் இருப்பதை விட புதிய யாப்பு சிபார்சில் பௌத்த மதத்திற்குரிய முன்னுரிமை மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது என்று அண்மையில் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து சிங்கள மக்களின் அச்சத்தை நீக்குவதற்காக சொல்லப்பட்டதாக நாம் எடுத்துக் கொண்டாலும். அவரது இந்த வார்த்தை சிறுபான்மை மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.

சம்பந்தர் தரப்பு இந்த யாப்பு தொடர்பில் நல்லெண்ணத்துடன் தொடர்ந்தும் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றபோது வடக்கு முதல்வர் மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்ற தொனியில் பேசி வருகின்றார்.

முஸ்லிம் தரப்பு இந்த யாப்புத் தொடர்பில் ஆங்காங்கு தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் பேசி வந்தாலும் அவர்களுக்கு இது தொடர்பில் எந்தத் தெளிவான நிலைப்பாடும் கிடையாது. தமிழர்களுக்கு ஏதாவது கிடைக்குமாக இருந்தால் தமக்கும் அதில் பங்கு என்று கை நீட்டுகின்ற அரசியலைத்தான் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தற்போது செய்து கொண்டிருக்கின்றன. இன்று முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிப்பேசுவதை விட தங்களது தனிப்பட்ட அரசியல் இருப்புத் தொடர்பாகத்தான் அவர்கள் ஓடித்திரிகின்றார்கள்-காய் நகர்த்துகின்றார்கள் என்பதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

மஹிந்த தரப்பு யாப்புத் தொடர்பான கருத்துக் கணிப்புத்தான் முதலில் நடக்கும் என்ற ஒரு பரப்புரையை நாட்டில் முன்னெடுத்து வருகின்றார்கள். எமக்குத் தெரிகின்ற அரசியல்படி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்தான் முதலில் வருகின்றது. ஆனால் அது ஜனவரியில் என்ற விடயத்தில் எமக்கு தொடர்ந்தும் சந்தேகங்கள் இருக்கின்றன. இன்னும் இது தொடர்பில் நடக்க வேண்டிய காரியங்கள் முடிவடைய வில்லை என்ற காரணத்தால்தான் எமக்கு இந்த சந்தேகம்.

நன்றி:08.10.2017 ஞாயிறு தினக்குரல்

Web Design by The Design Lanka