கொரோனா ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய இரணைத்தீவில் தோண்டப்பட்ட புதைகுழிகள்..! - Sri Lanka Muslim

கொரோனா ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்ய இரணைத்தீவில் தோண்டப்பட்ட புதைகுழிகள்..!

Contributors
author image

Editorial Team

– நன்றி, புதிய மன்னார் –

மக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 360 க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இரணைதீவு பகுதியில் மக்களின் அனுமதியோ அல்லது பொது அமைப்புக்களின் ஆலோசனைகளோ இன்றி கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய கல்லறைகள் அமைக்கப்பட்டு கொடிகள் நாட்டப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும், மதம் சார்ந்து அல்லாமல் ஒவ்வொறு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இரணை தீவு பகுதியில் இவ்வாற செயற்பாடுகளை எதிர்ப்பதாகவும், அந்த மக்கள் தெரிவித்தனர்.

எனவே அரசாங்கம் இம் முடிவை மீள் பரிசீலனை செய்து மக்கள் நடமாட்டம் அற்ற தீவுகளை தெரிவு செய்து அவ்வாறன பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்ய முனைய வேண்டும் எனவும், பல போரட்டங்கள் மத்தியில் மீள் குடியேறி வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் இரணை தீவு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த கோரிக்கையை வெளிப்படுத்துவதற்கு நாளைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரனை தீவில் வசிக்கும் மக்கள் அனைவரும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் இரணை தீவு பங்குதந்தை அருட்தந்தை மடுத்தீன் பத்திநாதர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கக்கட தீவு பகுதியிலும் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் நீர் வெளி வந்த காரணத்தினால் அப்பகுதியில் குழிகள் தோண்டும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team