கொரோனா தண்ணீரில் பரவாதென்றால் தீவுகளை தேடிப் போவது ஏன்..? - Sri Lanka Muslim

கொரோனா தண்ணீரில் பரவாதென்றால் தீவுகளை தேடிப் போவது ஏன்..?

Contributors
author image

Editorial Team

கொரோனா வைரஸ் தண்ணீரில் பரவாதென்றால் தீவுகளை தேடிப் போவது ஏன்? அதுவும் சகோதர தமிழ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் இரணைதீவுக்கு போவது ஏன்? வேண்டுமென்றே கொரோனாவை வைத்து இந்த இரு சமூகங்களையும் மோதவிடுவதற்காக மூட்டிவிடுகிறார்கள். இது மனிதாபிமானமேஅல்ல.

 

இந்த அனைத்து பழிபாவங்களையும் அரசுக்கு ஆதரவாக 20க்கு கைதூக்கியவர்கள் பொறுப்பேற்கவேண்டுமென ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

முஸ்லிம்களின் சடலங்கள் எரிப்பு நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியிருந்தது.முஸ்லிம்களை பழிவாங்கும்நோக்கில் வேண்டுமென்றே இதனை இழுத்தடித்தனர். பலத்த முயற்சிகள் அழுத்தங்களின்பின் அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் எழும்ப ஆரம்பித்திருக்கின்றன. அவை நியாயமானவை.

தமிழ்சகோதரர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமானது. அது அவர்களது உரிமை, பிழையல்ல. சிங்களப் பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கலாமென்றால் தமிழ் மக்கள் ஏன் எதிர்க்கமுடியாது? என்று கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில்:

எமது சடலங்களை அடக்க நாம் ஏற்கனவே இறக்காமம், சம்மாந்துறை, ஓட்டமாவடி என்று பல இடங்களை அடையாளப்படுத்தியிருந்தோம். அதையெல்லாம் விட்டுவிட்டு எங்கோஉள்ள இரணைதீவுக்குகொண்டு செல்வதன் மர்மம் என்ன? நிபுணர்குழுவே தண்ணீரில் இவ்வைரஸ் பரவாது என்று கூறியிருக்கிறது. அப்படியென்றால் ஏனிந்த சுத்துமாத்து?

முஸ்லிம்களுடைய சடலங்களை முஸ்லிம் மக்கள் வாழுகின்ற அவர்களுடைய சொந்த ஊரிலேயே அடக்கம் செய்வதை முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள அடக்குவதற்கு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்யப் படுவதையே முஸ்லிம் மக்கள் விரும்புகின்றனர்.

இதனால் தொற்று நோய் பரவுவதாக இருந்தால் முதலில் இங்குள்ள மக்களையே அது பாதிக்கும். இதனை அம்மக்கள் பொறுப்பேற்பதற்கு தயாராக இருக்கின்றனர்.

அதற்கு ஏற்றாற்போல் அனுமதி கிடைத்தால் முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியடைவர்.

Web Design by Srilanka Muslims Web Team