கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தினை இந்தியாவுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம்..! - Sri Lanka Muslim

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தினை இந்தியாவுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம்..!

Contributors
author image

Editorial Team

பாரிய சர்ச்சையின் பின்னர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர் கைப்பற்றுவதை நிறுத்திய போதும், துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

கொழும்பு தெற்கு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையுடன் இணைந்து அரச, தனியார் வர்த்தகமாக அபிவிருத்தி செய்வதற்காக சமர்ப்பிக்கப்படும் யோசனைகளை மதிப்பீடு செய்வதற்கான உடன்பாட்டுக் குழு கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அமைச்சரவையால் நியமிக்கப்பட்டது.

துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு மீள கையளிக்கும் ஒப்பந்தம் மற்றும் யோசனை விண்ணப்பங்களூடாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு குறித்த குழுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, அதானி போர்ட்ஸ் அன்ட் ஸ்பெஷல் எக்கனமிக் சோன் லிமிடட் ( Adani Ports & Special Economic Zone Limited) என்ற அதானி குழுமத்தின் பெயரை இந்திய உயர்ஸ்தானிகராலயம் பரிந்துரைத்துள்ளது.

இந்த திட்டத்தின் உள்ளூர் பிரதிநிதிகளான ஜோன் கீல்ஸ் ஹோல்டீங்ஸ் பீ.எல்.சி (John Keels Holdings PLC) மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

35 வருடங்களில் அபிவிருத்தி செய்து, நடைமுறைப்படுத்தி மீள கையளித்தல் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team