கொழும்பு முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த பல்கலை மாணவர்கள் உதவ வேண்டும் - என்.எம். அமீன் - Sri Lanka Muslim

கொழும்பு முஸ்லிம்களின் கல்வியை மேம்படுத்த பல்கலை மாணவர்கள் உதவ வேண்டும் – என்.எம். அமீன்

Contributors

பல்கலைக்கழகங்களில் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே படிக்கிறார்கள். இதற்குக் காரணம் கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் தற்போதைய நிலையாகும். இந்த நிலையை மாற்றுவதற்கு பல்கலைக்கழகங்களில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தம் பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்  என்.எம். அமீன் கூறினார்.
மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் 32 வது வருடாந்த பொதுக் கூட்டமும் இஸ்லாமிய தினமும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் எம் பஹ்தான் தலைமையில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது, இங்கு பயிலும் 200 முஸ்லிம் மாணவர்களில் ஒரு முஸ்லிம் மாணவரேனும் கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளினூடாக தெரிவானவர்கள் ஒருவரும் இல்லை. கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் நிலைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
1974 களில் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி 3 சதவீதமாக இருந்தது. இப்போது அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் தலைவராக நான் இருந்தேன். நாடளாவிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்குச் சென்று வார இறுதி வகுப்புக்களை நடத்தினோம். அதேபோன்று உங்களுக்கும் ஒரு மகத்தான பொறுப்புள்ளது. வார இறுதியில் கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி நிலையை மேம்படுத்த உங்கள் உதவி தேவைப்படுகின்றது. இது உங்களது சமூகக் கடமையும் கூட.
முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய நீரோட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் சிலர் ஆளில்லாத விமானம் ஒன்றை உருவாக்கினார்கள். அதில் ஒரு முஸ்லிம் மாணவரும் சம்பந்தப்பட்டிருந்ததைக் கண்டு சந்தோசமடைந்தோம். நம் மாணவர்கள் தனி வழியே செல்வதைத் தவிர்த்துக் செயற்பட வேண்டும். இது எங்கள் தாய்நாடு. நம் முதாதையர்கள் நம்பிக்கைக்கு அணிகலனாகத் திகழ்ந்தார்கள். அந்த நம்பிக்கையைத் தொடரும் வகையில் எமது வாழ்வு அமைதல் வேண்டும்.
பல்கலைக்கழக பிரதி உபவேந்தர், ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, பேராசிரியர் எம்.ரி. மல்ஹர்தீன், பொறியியலாளர் எம்.எம்.எம். சப்ரி ஆகியோரும் உரையாற்றினர். vidivelli

Web Design by Srilanka Muslims Web Team