கொவிட் நிலமை தீவிரம்; எதிர்வரும் நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு இராஜாங்க அமைச்சர்களின் அறிவிப்பு..! - Sri Lanka Muslim

கொவிட் நிலமை தீவிரம்; எதிர்வரும் நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு இராஜாங்க அமைச்சர்களின் அறிவிப்பு..!

Contributors

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் கொவிட்-19 இன் பிற வைரஸ் வகைகள் தோன்றக்கூடிய ஆபத்துகள் காணப்படுவதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இதுபோன்ற சூழ்நிலைக்கு மக்கள் தயாராக இருப்பது முக்கியம்.

இலங்கையின் கொரோனா வைரஸ் நிலைமை மிக முக்கியமானதாகவுள்ளதுடன், அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமையை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானதாக இருக்கும்.

எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை எதிர்வரும் 04 வாரங்களுக்கு பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என COVID கட்டுப்பாட்டிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்து, அநாவசியமாக வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

COVID தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தங்களுக்கான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவுறுத்தினார்.

தற்போது COVID நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதிக மரணங்களும் பதிவாவதாக அவர் கூறினார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்கள் எனவும் தற்போது பரவிவரும் டெல்டா பிற்ழ்வானது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கும் தொற்றுவதற்கான வாய்புகள் காணப்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டிருந்தாலும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு மிகுந்த அவதானத்துடன் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Web Design by Srilanka Muslims Web Team