கோகைன், கஞ்சா போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட வாடிகன் கார் - Sri Lanka Muslim

கோகைன், கஞ்சா போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட வாடிகன் கார்

Contributors
author image

World News Editorial Team

வாடிகன் தேவாலயத்தின் தூதரகப் பலகைகளுடன் சென்ற கார் ஒன்று பிரான்சில் சோதனையிடப்பட்டபோது 4 கி.கிராம் கோகைன் மற்றும் 200 கிராம் கஞ்சா இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது என்ற செய்தி இன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கார் தேவாலயத்தின் நூலகத்தில் பணி புரிந்து கடந்த 2003ஆம் ஆண்டில் ஒய்வு பெற்ற அர்ஜென்டினாவைச் சேர்ந்த கர்டினல் ஜார்ஜ் மெஜியாவுக்கு சொந்தமானதாகும். தற்போது 91 வயதாகும் அவர் முதுமை காரணமாக படுக்கையில் இருக்கின்றார்.

 

தற்போதைய போப்பாண்டவரான பிரான்சிஸ் இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட இரண்டு நாட்களில் சக நாட்டவரான மெஜியாவை சந்தித்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மெஜியா ரோமில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

மெஜியாவின் பிரத்யேக செயலாளர் இந்தக் காருக்கான வருடாந்திர பரிசோதனையை செய்யவேண்டி அந்தப் பொறுப்பை இரண்டு இத்தாலி நாட்டவரிடம் ஒப்படைத்திருந்தார் என்றும், அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஸ்பெயினுக்கு சென்று இந்த போதைப் பொருட்களை வாங்கியிருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. ஆனால் சட்டபூர்வமாக இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

 

இவர்கள் இருவரும் திரும்பி வரும்போது பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள சம்பெரி என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடமும் வாடிகன் பாஸ்போர்ட்டும் இல்லை என்பதால் வாடிகனுக்கு இதில் எந்த நேரடித் தொடர்பும் இல்லை என்று சட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள வாடிகன் அலுவலகம் இதில் தங்களுடைய ஊழியர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கூறியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team