“கோட்டாபய கடற்படை” முகாமுக்கு பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு! - Sri Lanka Muslim

“கோட்டாபய கடற்படை” முகாமுக்கு பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு!

Contributors

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில்,  “கோட்டாபய கடற்படை கப்பல்’ என்னும் கடற்படை முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில், தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்கும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சியானது காணிகளுக்குரிய தமிழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதற்கு முன்னரும் இவ்வாறு குறித்த காணிகளை அளவீடுசெய்து கடற்படையினருக்கு வழங்கும் முயற்சியில் பல தடவைகள் நில அளவீட்டுத் திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.  நேற்றும் (07) முன்னெடுக்கப்படவிருந்த அளவீடு செய்யும் முயற்சியும், மக்களின் எதிர்பால் கைவிடப்பட்டது.

குறிப்பாக காணி உரிமையாளர்களுக்கு, காணி அளவீடு தொடர்பிலான அறிவித்தல்கள் வழங்கப்பட்டே அளவீட்டு முயற்சிகள் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் காணிகளுக்குரிய பொதுமக்களால் அம் முயற்சிகள் தொடர்ச்சியாக தடுக்கப்பட்டுவந்தன.

இந் நிலையில் இம்முறை தமக்கு, காணி அளவீடு தொடர்பிலான எவ்வித அறிவித்தல்கள் வழங்காமல் நில அளவீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக காணி உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவை திணைக்களம் மற்றும் கடற்படையினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, காணி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நில அளவை திணைக்கள வாகனத்தை கடற்படை முகாமுக்குள் செல்ல விடாது கடற்படை முகாம் முன்பாக தடுத்தனர். இதனால் அளவீட்டு முயற்சிகள் தடுக்கப்பட்டன. இதனையடுத்து, காணி உரிமையாளர்களில் 15 பேர் தமது காணிகளை கடற்படை முகாமின் தேவைக்காக வழங்க முன்வந்திருப்பதாகவும் அதனை அளவீடு செய்யவே வந்திருப்பதாகவும் நில அளவையாளர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

காணிகளை வழங்க முன்வந்தவர்களென தென்பகுதியை சேர்ந்த மூன்று காணி உரிமையாளர்கள் அங்கு வருகை தந்திருந்துள்ளனர். இருப்பினும் 15 பேர் காணிகளை வழங்க முன்வந்திருப்பதாக நில அளவை அதிகாரி தெரிவித்திருந்தமைக்கமைய ஏனைய எவரும் அவ்வேளையில் அங்கு வருகை தரவில்லை . இதனையடுத்து, “15 பேர் காணி வழங்க முன் வந்திருப்பின் அதேபகுதியில் எமது காணிகளும் கடற்படையினரால் வேலி போட்டு மறித்து அடைக்கப்பட்டுள்ளது. எனவே கடற்படை முகாமுக்கு காணி வழங்க முன்வந்தவர்களுக்கு காணிகளை அளவீடு செய்து வழங்குவதற்கு, முன் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள எமக்குரிய காணிகளையும் அடையாளப்படுத்தி அளவீடு செய்து எமக்கு வழங்கிவிட்டு கடற்படை முகாமுக்கு காணி வழங்க முன் வந்தவர்களின் காணிகளை அளவீடு செய்யுமாறு” எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நில அளவையாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மக்களின் கோரிக்கையை ஏற்று கடிதம் ஒன்று கையொப்பமிட்டு வழங்கியதையடுத்து நில அளவையாளர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team