கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அணிக்குள் இருந்துகொண்டு மைத்திரி சதி..! - Sri Lanka Muslim

கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அணிக்குள் இருந்துகொண்டு மைத்திரி சதி..!

Contributors

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய(Gotabaya)-மஹிந்த(Mahinda) தலைமையிலான அணிக்குள் இருந்துகொண்டு சதிசெய்து வருவதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலைத் தடுப்பதற்கு அன்று சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டை கூட்டாமலிருந்து இன்று ஆசிரியர்கள் பிரச்சினைக்காக மைத்திரி கூட்டத்தை நடத்துவது கேலிக்குரியதாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி(Thissa Kuttiarachchi) தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithribala Srisena) சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டை அழைத்து அபயராமய விகாரையில் கூட்டம் கூட்டினார். அதனை பார்த்து நான் நகைத்தேன். அதனை பார்க்கின்ற போது ஈஸ்டர் தாக்குதல் தான் நினைவுக்கு வருகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் பற்றி முன்னறிவிப்பு கிடைத்தவுடன் கூட்டவிருந்த சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தையே அவர் இப்போது நடத்துகின்றனர். 05 வருடங்கள் ஆட்சிசெய்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆசிரியர்கள் பிரச்சினையை தீர்க்கமுடியாமற் போனது. இன்று அக்கூட்டத்தை நடத்தியுள்ளார். அன்று நிறைவேற்று அதிகாரம் இருந்தது.

சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) அன்று அமைச்சரவையில் இருந்தார் .ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவராகவும் செயற்பட்டார். அக்கிலவிராஜ்(Akila Viraj) கல்வி அமைச்சராகவும், கரு ஜயசூரிய(Karu jeyasuriya) அமைச்சராக இருந்தார். இவர்கள் இணைந்து சர்வ கட்சி மாநாட்டை நடத்தினர்.

69 இலட்சம் மக்கள் ஆணை, மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை உடைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கக்கூடிய விடயத்தை வழங்காமல் இருக்குமா? ஏன் பிரபல்யமான தீர்மானங்களை எடுக்காமல் உள்ளோம். அதற்கு  விருப்பம். ஆனாலும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே முடியாதென்கின்றோம். முடியுமானால் ஈஸ்டர் தாக்குதல் பற்றி சர்வகட்சி மாநாட்டை நடத்துங்கள் என மைத்திரியிடம் கோருகின்றோம்.

பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஈஸ்டர் தாக்குதல் பற்றி சர்வகட்சித்தலைவர்கள் மாநாட்டை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம். ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் பிரதான பொறுப்பாளியாக மைத்திரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு டீல் செய்கின்றவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team