அதிக தடைவை சர்வதேச கிரிக்கெட் விருதுகளை பெற்ற வீரராக சங்ககார திகழ்கிறார் - Sri Lanka Muslim

அதிக தடைவை சர்வதேச கிரிக்கெட் விருதுகளை பெற்ற வீரராக சங்ககார திகழ்கிறார்

Contributors

சர்வதேச கிரிக்கட் அரங்கில் மட்டுமல்லாமல் அரங்குக்கு வெளியேயும் கனவானாக, நேர்மை­யா­ளனாக, சிறந்த பண்பாளனாக அனைவராலும் மதிக்கப்படும் குமார் சங்கக்கார இவ் வருடம் அதி சிறந்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் வீரர் விருதை வென்றதன் மூலம் அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் 2004 முதல் வழங்கப்பட்டு வரும் சர்வதேச கிரிக்கட் பேரவை விருது விழாவில் அதிக தடவைகள் விருதுகளை வென்றவர் என்ற சாதனையையே குமார் சங்கக்கார நிலைநாட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த மூன்று வரு­டங்களில் குறைந்தபட்சம் ஒரு விருதை­யேனும் வென்ற ஒரே ஒரு வீரர் என்ற பெரு­மைக்குரிய குமார் சங்கக்கார இவ் வருடம் வரை மொத்தம் ஆறு தடவைகள் சர்வதேச விருதுகளை வென்­றுள்ளார்.

2011இல் வருடத்தின் அதி சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வீரருக்கான சர்வதேச கிரிக்­கட் பேரவை விருதை வென்ற அவர், அதேவருடம் மக்கள் அபிமான வீரர் விருதை வென்றிருந்தார்.

2012இல் வருடத்தின் அதி சிறந்த சர்வதேச கிரிக்கட் வீரருக்கான சேர் கார்ஃவீல்ட் சோபர்ஸ் விருதை வென்ற குமார் சங்கக்கார, வருடத்தின் அதி சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் மக்கள் அபிமான வீரர் விருதையும் தனதாக்கிக் கொண்டிருந்தார்.

அவ்வருடம் வருடத்தின் அதி சிறந்த சர்வ­தேச ஒருநாள் கிரிக்கட் வீரர் விருதை மயிரிழையில் விராத் கோஹ்லியிடம் தவறவிட்டிருந்தார்.

அதனை ஈடு செய்யும் வகையில் இவ் வருடம் அந்த விருதை வென்றெடுத்தார்.

ஒரு சிறந்த விக்கட் காப்பாளராக, துடுப்­பாட்ட வீரராக பிரகாசித்து வரும் குமார் சங்கக்­கார 2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்­டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணியின் தலைவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வருடத்திற்கான விருதுக்குரிய பருவ­காலத்தில் 63.73 என்ற சராசரிப் பெறுதியுடன் 956 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்ற குமார் சங்கக்கார, குறிப்பிட்ட பருவ காலத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக குவித்த 169 ஓட்டங்கள் அவரது அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி எண்ணிக்கையாக அமைந்தது.

36 வயதான குமார் சங்கக்கார தனது 13 வருட கிரிக்கட் வாழ்க்கையில் இரண்டு வகை பிரதான கிரிக்கட் போட்டிகளிலும் 10,000 ஓட்டங்களைக் குவித்து தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

117 டெஸ்ட் போட்டிகளில் 10,486 ஓட்டங்­களைப் பெற்று இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரி­சை­யில் இரண்டாம் இடத்தில் உள்ளார். (மஹேல ஜயவர்தன 138 போட்டிகள், 10,806 ஓட்டங்கள், 31 சதங்கள்). எனினும் இலங்கை சார்பாக அதிகூடிய 33 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ளவர் குமார் சங்கக்கார ஆவார்.

இவர் 350 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 16 சதங்கள் அடங்கலாக 11,689 ஓட்டங்களைப் பெற்று இலங்கை வீரர்களில் சனத் ஜயசூரியவுக்கு (441 போட்டிகள், 13,364 ஓட்டங்கள், 28 சதங்கள்) அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அத்துடன் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்­கட் போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட ஓட்­­டங்­களை மொத்தமாகப் பெற்ற மூன்று இலங்கையர்களில் இவரும் ஒருவராவார்.

மஹேல ஜயவர்தன (49 இன்., 1,335 ஓட்டங்கள்), திலக்கரட்ன டில்ஷான் (52 இன்., 1,317 ஓட்டங்கள்) ஆகியோருக்கு அடுத்ததாக 46 இன்னிங்ஸ்களில் 1,263 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

மூவகையான சர்வதேச கிரிக்­கட் போட்டிக­ளி­லும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப தனது துடுப்­பாட்ட நுட்பங்களை மாற்­றிக்கொள்ளக்கூடிய ஆற்றல் இவ­ரி­டம் வெகுவாக உள்ளது.

டெஸ்ட் போட்டியிலிருந்து ஒருநாள் போட்­டிக்கோ அல்­லது சர்வதேச இருபதுக்கு 20 போட்டிக்கோ செல்லும் போது அவரது துடுப்­பாட்ட ஆற்றல் இயல்­பா­கவே வெளிப்­படுவதை அவ­தானிக்­க­லாம். இந்த மூன்று வகை­யான போட்டிகளில் அவர் பின்­­பற்றும் அணு­கு­முறைகள் இளைய வீரர்­களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

துடுப்பாட்டத்தில் போன்றே விக்­கட் காப்பிலும் அவரிடம் திறமை குடிகொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

டெஸ்ட் போட்டிகளில் 169 பிடிகளை எடுத்துள்ளதுடன் 20 ஸ்டம்ப்களை செய்துள்­ளார். அதேபோன்று சர்வ­தேச ஒருநாள் போட்­டி­களில் 355 பிடிகளுடன் 87 ஸ்டம்ப்களையும் செய்­துள்ளார். சர்வதேச இரு­பதுக்கு 20 போட்டிகளில் 23 பிடிகளை எடுத்துள்ள அவர் 19 ஸ்டம்ப்களை செய்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் குமார் சங்­கக்­­கார ஒரு பரிபூரண கிரிக்கட் வீர­ரா­கத் திகழ்கின்றார் என்று கூறுவதே பொருத்தமாகும்.

Web Design by Srilanka Muslims Web Team