சச்சின் சாதிப்பாரா? லாராவின் ஆசை நிறைவேறுமா? - Sri Lanka Muslim

சச்சின் சாதிப்பாரா? லாராவின் ஆசை நிறைவேறுமா?

Contributors

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கின்றது.

இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்தத் தொடருடன் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதால் அவருக்கு பிரம்மாண்டமான வழியனுப்பு விழா ஏற்பாடு கொல்கத்தா கிரிக்கெட் சங்கத்தால் செய்யப்பட்டு வருகின்றது.

இது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தனது கட்டுரையில் வெளியிட்டிருப்பதாவது,

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு நாடுகளின் கிரிக்கெட் இடையே வரலாற்று தொடர் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நான் எப்போதுமே கிரிக்கெட்டை ஒரு குழுவினரின் விளையாட்டாகத்தான் பார்க்கிறேன். ஆனால் சில சமயங்களில் சில தனி மனிதர்களும் இதில் சிறப்பு கவனத்தைப் பெறுகின்றனர். அதுபோல் என்னுடைய நண்பர் சச்சின் ஒய்வு பெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடரிலும் அவரது முக்கியத்துவம் தனித்துத் தெரியும்.

கொல்கத்தாவும், ஈடன் கார்டன்சும் இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக கொண்டாட உள்ளன. சச்சினின் மெழுகுச்சிலை ஒன்று ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு 70,000 முகமூடிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கேள்விப்பட்டேன். முதல்நாள் நாணய சுழற்சிக்கும் பயன்படுத்தப்படும் நாணயத்தில் சச்சினின் முகம் பொறிக்கப்பட்டிருக்கும். முதன்முறையாக இங்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளிலும் சச்சின் முகம் அச்சிடப்பட்டுள்ளது. சச்சின் சல்யூட் என்ற தலைப்பில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது.

இத்தகைய கொண்டாட்டங்கள் ஒருவரது கவனத்தைச் சிதற அடிக்க முடியும். பிரிவுபசாரம் என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை அனுபவத்திலிருந்து கூறமுடியும். சச்சினின் கண்களில் எங்காவது கண்ணீர்த்துளி இருக்கலாம். இந்த விழா உண்மையில் உணர்வுகளை சோதிக்க முடியும். நான் எப்போதுமே ரன்களின் கணக்கீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் கிடையாது. ஆயினும் நான் முன்பு கூறியைதையே மறுபடியும் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

சச்சின் இந்தப் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும். ஆனால் மேற்கிந்திய தீவுகள் வெல்லவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈடன் கார்டன் வண்ணமயமாகக் காணப்படும். ஆனால் இறுதியில் வெற்றியின் வண்ணம் எந்த அணியினரால் ஏற்படுகின்றது என்பதைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team