சட்டசபையில் காமன்வெல்த் மாநாட்டை, புறக்கணிக்கக் கோரும் தீர்மானம் - காங்கிரஸ் ஆதரிக்க முடிவு? - Sri Lanka Muslim

சட்டசபையில் காமன்வெல்த் மாநாட்டை, புறக்கணிக்கக் கோரும் தீர்மானம் – காங்கிரஸ் ஆதரிக்க முடிவு?

Contributors

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என, தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அத்தீர்மானத்தை ஆதரிப்பதா, புறக்கணிப்பதா? என்பது குறித்து, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்,எல்.ஏ.க்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். “டில்லி மேலிடம் தெரிவிக்கும் முடிவை எடுக்கலாம்’ என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. அதற்கு முன், சட்டசபையில் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், எம்.எல்.ஏ.,க்கள் பட்டுக்கோட்டை ரங்கராஜன், ஜான் ஜேக்கப், விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், எம்.எல்,ஏ.,க்கள் பேசியது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிகளில் உள்ள பிரச்னைகளை சபையில் சுட்டிக்காட்டுவோம் என, கூறியுள்ளனர். ‘இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது’ என்ற தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற கொண்டு வந்தால், அதை ஆதரிப்பதா, புறக்கணிப்பதா? என்ற கேள்வியை மற்றொரு எம்.எல்.ஏ., எழுப்பினார்.

அதற்கு ஞானதேசிகன் கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்பது குறித்த உறுதியான முடிவு இன்னும அறிவிக்கப்படவில்லை. தற்போது, இலங்கையில் வடக்கு மாகாணத்தின் முதல்வராக விக்னேஸ்வரன் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் இலங்கை தமிழர்களின் நலனுக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வகையில் நாம் முடிவை எடுக்க வேண்டும்.சட்டசபையில் இப்படியொரு தீர்மானம் கொண்டு வந்தால், காங்கிரஸ் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது சிக்கலான விஷயம். எனவே, காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக்கிடம் ஆலோசித்து, முடிவை தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ‘சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தால், அனைத்து கட்சிகளின் கோரிக்கையின்படி காங்கிரசும் ஆதரிக்கலாம்’ என, கூறியுள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team