சட்டத்தின் துணையோடு அஸாத் சாலி விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் : தேசிய ஐக்கிய முன்னணி நம்பிக்கை..! - Sri Lanka Muslim

சட்டத்தின் துணையோடு அஸாத் சாலி விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் : தேசிய ஐக்கிய முன்னணி நம்பிக்கை..!

Contributors
author image

Editorial Team

எல்லாம் வல்ல இறைவன் துணையோடு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி மீண்டும் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்புவார் என்ற உறுதியான நம்பிக்கையில் தொடர்ந்தும் நிலைத்திருக்குமாறும், அதற்கான பிரார்த்தனைகளில் தொடர்ந்தும் ஈடுபடுமாறும் சகல ஆதரவாளர்கள், அபிமானிகள், நண்பர்கள், மற்றும் கட்சித் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தவர்களாக இதனைத் தொடங்குகின்றோம்.
எமது கட்சித் தலைவர் அஸாத் சாலி எந்தவிதமான நியாயமான காரணமும் இன்றி சுமார் 100 நாற்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடைசியாக அவர் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மா அதிபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அஸாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு எமது தலைவர் சார்பாக ஆஜராகும் இந்த நாட்டின் தலைசிறந்த சட்டத்தரணிகள் குழுவுக்கு கிடைத்துள்ள முதலாவது வெற்றியாகும்.
உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் முன்வைத்த காத்திரமான வாதங்கள் அவற்றுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய பாரபட்சமற்ற பதில்கள் என்பன காரணமாகத் தான் இப்போது அஸாத் சாலிக்கு எதிரான குற்றப்பத்திரம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி இந்த விடயம் மேல் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த நாட்டின் சட்டத்துறை மீதும் நீதிமன்ற கட்டமைப்பின் நடுநிலைத்தன்மை மீதும் தொடர்ந்தும் நாம் உறுதியான நம்பிக்கை கொணடுள்ளதால் இந்த வழக்கை சட்டரீதியாக எதிர் கொள்ள எமது சட்டத்தரணிகள் தயாராகி வருகின்றனர்.
தலைவர் அஸாத் சாலியை இதுவரை சந்தித்த சட்டத்தரணிகள் மூலம் எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி இது வரை அவரிடம் சுமார் ஐம்பது தடவைகள் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாம்.
100 நாற்களுக்கும் அதிகமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 50க்கும் அதிகமான வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் ஒரேயொரு குற்றச்சாட்டுத் தான் சுமத்தப்பட்டுள்ளது. எமது சட்டத்தரணிகள் ஊடாக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தின் பிரதி ஒன்றையும் நாம் காணக் கூடியதாக உள்ளது. சகல பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அவர் ஊடக சந்திப்பொன்றில் ஷரீஆ சட்டம் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியமானது என்ற தொனியில் பேசிய விடயமே பிரதானமான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையிலான நல் இணக்கத்தை இது பாதிக்கும், நாட்டின் சட்டங்களுக்கு இது புறம்பானது என்ற ரீதியில் தான் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற பல விடயங்களை இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் பேசி, மக்களை வன்முறைக்கு தூண்டிவிட்ட பலர் இன்னமும் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர் என்பதும் இங்கு நினைவூட்டத் தக்கதாகும்.
இங்கு இன்னொரு விடயத்தையும் நாம் மறந்து விடக் கூடாது. அஸாத் சாலி கைது செய்யப்பட்ட போது பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் கூறிய காரணம் இதுவல்ல. அவர் பயங்கரவாதத்துக்கு துணை நின்றார். ஏப்பிரல் 21 தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார், என்று அவரை ஒரு பயங்கரவாதியாகத் தான் சித்தரித்தார்கள். இன்று அவர்களே அது பொய்யென ஒப்புக் கொண்டுள்ளனர். அதனால் தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் அது பற்றி ஒரு வார்த்தை கூட பிரஸ்தாபிக்கப்படவில்லை. எனவே தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டும் பாரதூரமற்ற ஒரு குற்றச்சாட்டு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை எமது சட்டத்தரணிகள் கொண்டுள்ளனர்.
எனவே அஸாத் சாலி பிணையிலோ அல்லது நிரந்தரமாகவோ வீடு திரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நாம் உறுதியாக நம்புவோமாக. இந்த நாட்டின் நீதித்துறையின் பாரபட்சமற்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நம்பிக்கை கொள்வோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விடயங்கள் அனைத்துக்கும் பொறுப்பாளனாக இருக்கின்ற எல்லாம் வல்ல இறைவனின் அருள் எமக்கு தொடர்ந்தும் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கட்சியின் ஆதரவாளர்களை தொடர்ந்தும் உற்சாகத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய ஐக்கிய முன்னணி.

Web Design by Srilanka Muslims Web Team