சட்டத்துறையில் பொன்விழா கண்ட சட்டத்தரணி ஹம்ஸா! - Sri Lanka Muslim

சட்டத்துறையில் பொன்விழா கண்ட சட்டத்தரணி ஹம்ஸா!

Contributors

சீனன்கோட்டையின் சிரேஷ்ட சட்டத்தரணி முஹம்மத் கரீம் முஹம்மத் ஹம்ஸா சட்டத்துறையில் ஐந்து தசாப்தங்களை பூர்த்தி செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு களுத்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் களுத்துறை மேல்நீதிமன்ற கட்டட வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சிட்ரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் களுத்துறை  மற்றும் பாணந்துறை நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், களுத்துறை  சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அவரது சேவையை பாராட்டி நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. சட்டத்தரணி எம்.ஸீ.எம். ஹம்ஸா தனது ஆரம்பக் கல்வியை ஆங்கில மொழியில் களுத்துறை ‘Holy Family Convent’ இலும் பின்னர் 5ஆம் ஆண்டு வரை சீனன்கோட்டை ஜூனியர் பாடசாலையிலும் கற்றார். 06ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரை கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கற்று, 1965ஆம் ஆண்டு கொழும்பு சட்டக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

அவர் அங்கு சட்டக்கல்லூரியில் L.L.B பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்று 1970ஆம் ஆண்டு அண்றைய பிரதம நீதியரசர் எச்.என்.ஏ. பெர்னாண்டோ மற்றும் ஏ.சீ.ஏ. அலஸ் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து சட்டத்தரணியானார்.

அதன் பின் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சிறிது காலம் சட்டத்தரணியாக பணிபுரிந்த இவர், களுத்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றலாகி இன்று வரை (பொன்விழா கொண்டாடும் வரை) அதே நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றி வருகின்றார்.

அவர் சட்டத்தரணியாக பணியாற்றிக் கொண்டே கொழும்பு பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச வியாபார சட்டத்தில்’ டிப்ளோமாவை (1988) பூர்த்தி செய்தார். தொடர்ந்தும் 50வருட காலமாக களுத்துறை நீதிமன்றத்தில்

சட்டத்தரணியாக பணி செய்து வருகிறார். அவர் தர்கா நகரை பிறப்பிடமாகவும் சீனன்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் ஹம்ஸாவின் மைத்துனராவார்.

சீனன்கோட்டை ஜாமிய்யத்துல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீட நிர்வாக சபைத் தலைவரும் சீனன்கோட்டை பள்ளிச்சங்கத்தின் உப  தலைவருமான சட்டத்தரணி எம்.ஸி.எம். ஹம்ஸா, சீனன்கோட்டையைச் சேர்ந்த  காலஞ்சென்ற மர்ஹூம்களான வை.எல்.எம். கரீம், மழீஹா தம்பதிகளின் புதல்வராவார்.

Web Design by Srilanka Muslims Web Team