சட்ட மா அதிபர் சார்பிலான பிரசன்னம் இல்லை - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் பிணைகோரும் வாதம் ஒத்திவைப்பு! - Sri Lanka Muslim

சட்ட மா அதிபர் சார்பிலான பிரசன்னம் இல்லை – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் பிணைகோரும் வாதம் ஒத்திவைப்பு!

Contributors

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும், நடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சார்பில், பிணைகோரும் விசேட வாதங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்த பிணைக் கோரிக்கை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை (3), எழுத்து மூல சமர்ப்பணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிரதி சி.ஐ.டி. க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இன்று (07) இந்த வழக்கு, கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர். சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் பரிசோதகர் கல்வலகே ஆஜரானார்.

இதன்போது, தனது வாதங்களுக்கு எதிர்வாதங்களை அல்லது பதில்களை சி.ஐ.டி. அதிகாரி முன்வைப்பாராக இருப்பின், தான் வாதங்களை இன்று முன்வைக்க தயார் என ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா குறிப்பிட்டார்.

எனினும், நீதிமன்றில் ஆஜரான பொலிஸ் பரிசோதகர் கல்வலகே, விசாரணை கோவை சட்ட மா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரம், நீதிமன்றில் இந்த பிணை விவகாரத்தில் ஆஜராகி, முறைப்பாட்டாளர் சார்பில் வாதங்களை முன்வைக்குமாறு சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், இன்று சட்ட மா அதிபரின் பிரதிநிதித்துவம் நீதிமன்றில் இருக்கவில்லை. இந்நிலையில், சி.ஐ.டி. க்கு சட்ட மா அதிபரின் பிரதிநிதியின் உதவியை பெறவும், எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு பதிலளிக்கவும் அவகாசமளித்த நீதிவான், சட்ட மா அதிபரின் பிரதிநிதித்துவத்துடன், எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக சி.ஐ.டி. க்கு ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்தே வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team