சத்தியத்தை உறுதிப்படுத்திய பத்ர் களம்! - Sri Lanka Muslim

சத்தியத்தை உறுதிப்படுத்திய பத்ர் களம்!

Contributors

இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் நிகழ்வு மகத்தான மாற்றத்தையும், புரட்சிகரமான திருப்பத்தையும் ஏற்படுத்தியது. நன்மைக்கும் தீமைக்கும் இடையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில், சத்தியத்திற்காகப் போராடியோர் சிறுகுழுவினராக இருந்து கொண்டே தமக்கு எதிராகப் போராடியோரைத் தமது இறைநம்பிக்கையின் வலிமையால் தோற்கடித்தனர்.

பத்ர் நிகழ்ந்த ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் திங்கள், பதினேழாம் நாள் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நோக்கப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த 1000 போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷிகளின் அணியை எதிர்கொள்ள, 313 ஸஹாபாத் தோழர்கள் மிகக் குறைந்த ஆயுதபலத்துடன், அன்றைய தினம் நோன்பு நோற்றவர்களாக இருந்தனர்.

முஸ்லிம்களை விட எதிர்ப்படையினர் மூன்று மடங்கு அதிகமாகவே இருந்தனர். எனினும், முஸ்லிம்கள் ஈமானிய பலத்தால் அனைத்தையும் மிகைத்து, அல்லாஹ்வின் உதவியோடு வெற்றி வாகைசூடினர்.

உண்மையில் பத்ர் களத்தில் நின்றவர்கள் நோன்பு நோற்றவர்களாக இருந்தனர். அவர்கள் ஆயுத மற்றும் படைப்பலம் குன்றிய நிலையில் காணப்பட்டனர். எதிரிகள் பலமான போர்வீரர்களுடனும், போர்க் குதிரை, தளபாடங்களுடனும் களம் புகுந்தனர். எதிரிகளின் படையுடன் ஒப்பிடும் போது, இறை நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) மூன்றில் ஒன்றாக குறைந்தே இருந்தனர். ஆனால், அல்லாஹ்வின் அருளில் உறுதியான நம்பிக்கை வைத்த உள்ளங்கள் இறை நாட்டத்தினூடாக இறுதியில் வெற்றிவாகை சூடினர்.

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை:

இந்த யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரான இரவு நபி (ஸல்) அவர்கள், உறங்காது காலை வரையிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். அன்னார் நெஞ்சுருக அல்லாஹ்விடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்.

‘இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்று. நீ எனக்கு வாக்களித்ததை வழங்கு! இறைவா! இஸ்லாமிய இக்கூட்டம் அழிக்கப்பட்டால் இப்பூமியில் உன்னை வணங்குபவர்கள் (இதன் பின்னர்) எவரும் இருக்க மாட்டார்கள். (ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம்)

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்த பின்னர் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்.

‘நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடிய போது (அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக் கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் (பேர்களைக்) கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.’ (அல் குர்ஆன் 08:09)

யுத்தம் ஆரம்பம்:

நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை அணிவகுக்கச் செய்து யுத்த தர்மங்களைப் போதித்து, அறிவுறுத்தினார்கள். ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு, ரமழான் மாதம் பதினேழாம் நாள் காலை பத்ருப் போர் நடைபெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் நோன்பு நோற்றவர்களாக இறைவனின் உதவியில் முழுமையாக நம்பிக்கை வைத்தவர்களாகக் களத்தில் பிரவேசிக்க எதிரிகள் களியாட்டத்துடன் களம் புகுந்தனர்.

அன்றைய போர் முறைப்படி, எல்லோரும் ஒரே நேரத்தில் களத்தில் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக் கொண்டு, படையின் பலத்தை பரிசீலிப்பர். இதனடிப்படையில் எதிர்படை சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக அன்சாரிகள் மூவரை நபிகளார் அனுப்பிய போது, எங்களுக்கு நிகரான குறைஷிகளை அனுப்புங்கள் என்றனர். அப்போது நபியவர்கள் உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி), அலி (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். இவர்கள் மூவரும் எதிர்ப்படை சார்பாக வந்த பின்வரும் மூவருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்தார்கள். ஹம்ஸா (ரலி) உத்பாவுடனும், உபைதா (ரலி) வலீதுடனும், அலி (ரலி) ஷைபாவுடனும் போரிட்டனர்.

அல்லாஹ்வின் உதவி:

இப்போரில் கலந்து கொண்டவர்களில் முஸ்லிம் தரப்பினர் குறைவாக இருந்தும், அல்லாஹ் அவர்களுக்கு எதிரணியினரை குறைவாகக் காண்பித்து, முஃமின்களின் தொகையைக் காபிர்களுக்கு அதிகமாகக் காண்பித்தான். (நபியே! உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டு இருந்திருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்து விட்டான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவன். (அல்குர்ஆன்)

அல்லாஹுத்தஆலா, தனது உதவியை நேரடியாக வழங்கினான், வானவர்களை அனுப்பியும் உதவி புரிந்தான், ஆயிரம் வானவர்களை அனுப்பி உதவி புரிந்தான்.

சத்தியத்திற்கு வெற்றி:

போரில் கலந்து கொண்ட குறைஷிகளின் முக்கிய தலைவர்களில் 24பேர் மரணித்தனர். (ஆதாரம்: புகாரி 3976, முஸ்லிம்) மொத்தமாக 70 பேர் மரணித்தனர், 70 நபர்கள் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம்களில் 14 பேர் ஷஹீதாகினர். அவர்களில் ஆறு பேர் குறைஷியர் (முஹாஜிர்கள்), எட்டு பேர் (அன்ஸாரிகள்) ஆவர்.

எனவே, முஸ்லிம்களின் ஈமானிய பலத்தினால் பத்ர் களத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது.

படிப்பினைகள்:

ஈமானிய பலமுள்ளவர்களுடன் அல்லாஹ் எப்பொழுதும் இருக்கின்றான். ஈமானிய பலத்தை எந்த பலமும் மிகைக்க முடியாது, ஒரு சமூகத்தின் வெற்றி அவர்களின் ஒற்றுமையிலும் அவர்களது தலைவர்களுக்கு வழிப்படுதலிலும் தங்கியுள்ளது. ஒரு சமுகத்தை கட்டியெழுப்புவதற்கு அவர்களது தலைவர்கள் தன்னிச்சையாக செயற்படாமல் அவர்களுடன் கலந்தாலோசித்து செயற்படல் வேண்டும், தியாகத்திற்கு பின்னால் பல நலவுகள் உண்டாகும்.

எனவே இந்நிகழ்வை நினைவு கூர்வதுடன் இதன் மூலம் படிப்பினை பெற வல்ல அல்லாஹ் துணை புரியட்டும்.

அஷ்ஷெய்க் ஏ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி
(காஷிபி)

Web Design by Srilanka Muslims Web Team