சத்தியம் ஒருபோதும் சாவதில்லை » Sri Lanka Muslim

சத்தியம் ஒருபோதும் சாவதில்லை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(மதியன்பன்)


அடுத்தவர்கள்
அழக்கூடாது என்பதற்காக
நீதியை
நிலை நாட்டத் துடிப்பவன் நீ..

நீ அழுதபோது
கொஞ்ச நேரம்
நீதி தேவனே நிலைகுலைந்து போனான்
நாங்களும்தான்….

நீதியைக் காக்க
ஒரு ஜீவன் சமாதியாகியிருக்கிறான்
உனக்காக…

பாதி உயிர் போனது போல்
நீ
பதறியழுததை பார்க்க முடியவில்லை.

உன்னை
கொலை செய்வதற்காக
கோடாரிக் காம்புகள் விலைபோய் இருக்கிறார்கள்
என்பதை மாத்திரம்
எங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

எப்படி மனசு வந்தது
இந்த இளஞ்செழியனை இல்லா தொழிப்பதற்கு..
நீதியை
பாதியில் கொன்று விடலாமா..?

அணிவது
கறுப்பு கோட்டென்றாலும்
நீ
வெள்ளை மனசோடுதான்
விசாரணை செய்வாய் என்பார்கள்..

சத்தியம்
தோற்றுவிடக் கூடாதென்று
வித்தியா வழக்கைக்கூட
வித்தியாசமாய் விசாரித்தவன் நீ..

உன்
வழக்குத் தீர்ப்புகளை வாசித்திருக்கிறேன்
அதில்
நேர்மையும் வாய்மையும்
நிறையவே சேர்ந்திருப்பதை உணர முடிந்தது.

நடு ராத்திரியில் ஒரு பெண்
தனித்து
நம்பிக்கையோடு வருவதை
காணவேண்டுமென்று கனவு கண்டவன் நீ..
காந்தியைப் போல..

கவலைப்படாதே..
உன் கனவுகள் நனவாகும் வரை
நீதியும் நீயும் நிலைத்திருக்க வேண்டும்

23.07.2017

Web Design by The Design Lanka