சப்ராஸ் மன்சூர் தன்னுடைய பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் : சக வேட்பாளர்கள் கூட்டாக வேண்டுகோள் ! - Sri Lanka Muslim

சப்ராஸ் மன்சூர் தன்னுடைய பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் : சக வேட்பாளர்கள் கூட்டாக வேண்டுகோள் !

Contributors

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபையில் குதிரை சின்னத்தில் களமிறங்கிய வேட்பாளர்களுக்கிடையிலான சந்திப்பும், கல்முனை மாநகர சபை உறுப்பினர் விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடலும் இன்று இரவு கல்முனையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அக்கட்சியின் சட்டவிவகார, கொள்கை அமுலாக்கள் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், அக்கட்சியின் கல்முனை மத்தியகுழு பிரதித்தலைவரும், 12ம் வட்டார வேட்பாளருமான மௌலவி சபா முகம்மத், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், மருதமுனை வேட்பாளருமான நூருல் பௌஸ், மருதமுனை இளைஞர் அமைப்பாளரும், மருதமுனை வேட்பாளருமான சமட் ஹமீத், நற்பிட்டிமுனை அமைப்பாளரும், வேட்பாளருமான சப்ரோஸ் ஜமால், 12ம் வட்டார வேட்பாளர் ஏ.பி. தன்பீர், மற்றும் பட்டியல் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது, கடந்த 2018 இல் நடைபெற்ற கல்முனை மாநகர சபையில் தேசிய காங்கிரஸ் சார்பில் பெறப்பட்ட 1522 வாக்குகளுக்கு கிடைக்கப்பெற்ற ஆசனத்தை சுழற்சி முறையில் பங்கிடுவது என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முதலில் சபை உறுப்பினராக சென்றிருந்த அக்கட்சியின் சார்பிலான வேட்பாளரும், சட்டவிவகார, கொள்கை அமுலாக்கள் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தனது ஒருவருட பூர்த்தியின் பின்னர் இராஜினாமா செய்தவுடன் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வாக்கு பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்த கல்முனையை சேர்ந்த சப்ராஸ் மன்சூர் எல்லோரது விருப்பத்தின் பேரிலும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் அவருடைய பதவிக்காலமான ஒருவருடம் முடிவடைந்து மேலதிகமாக ஒரு வருடமுமாக இரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரை தொடர்ந்து அடுத்தவர் அந்த இடத்திற்கு செல்ல வழிவிட்டு இராஜினாமா செய்யாமல் தொடர்ந்து இருந்து வருவது பொருத்தமற்ற செயல் என்றும் அவர் உடனடியாக இராஜினாமா செய்ய முன்வரவேண்டும் என்றும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டது. மேலும் கட்சியின் நெறிமுறை, தலைமையின் நம்பிக்கைக்கு கட்டுப்பட்டு உடனடியாக சப்ராஸ் மன்சூர் இராஜினாமா செய்வதே அவரது கௌரவத்திற்கு சிறந்தது என்று இங்கு ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு இந்த முடிவுகள் தலைமைக்கும், கட்சி வட்டாரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team