சமஷ்டிக் கோரிக்கை சட்டரீதியானதே என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு; சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமே! » Sri Lanka Muslim

சமஷ்டிக் கோரிக்கை சட்டரீதியானதே என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு; சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமே!

Azmin66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

என்.எம்.அப்துல்லாஹ்


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் யாப்பிலே கட்சியின் நோக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வாசகம் “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நோக்கம், இலங்கையில் அரசியல், பொருளாதார, கலாசார சுதந்திரத்தோடு கூடிய சம்ஷ்டி வடிவிலான ஒரு தமிழ் சுயாட்சியையும், அதேபோன்ற ஒரு முஸ்லிம் சுயாட்சியையும் நிறுவுதல்” என்பதாகும்.

மேற்படி வாசகம் இலங்கையின் அரசியலமைப்பின் 6வது திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 157 A(4) பிரிவிற்கு முரணானது என்றும் இலங்கையின் ஐக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடியது என்றும், பிரிவினைக் கோரிக்கையை முன்னெடுப்பதாகவுள்ளது என்றும் கூறி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக உச்சநீதிமன்றிலே ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் விசாரணைகளை நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இதன் தீர்ப்பு அண்மையில் வெளியிடப்பட்டது அதன் பிரகாரம் “சம்ஷ்டிக் கோரிக்கையானது நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கை அல்ல” என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது. மேற்படி தீர்ப்பானது சிறுபான்மை மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த சட்டரீதியான அங்கீகாரமாகவே நோக்கப்படுகின்றது.

இலங்கையின் முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை நாம் எதை நோக்கிப் பயணிக்கின்றோம் என்று எமது அரசியல் தலைவர்கள் தெளிவான இலக்குகளை அடையாளம் செய்யவில்லை, வாக்கு வேட்டைக்காக எதனையும் கூறுகின்ற தலைவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்கல் இருக்கின்றார்கள்.

இதனால் முஸ்லிம் சமூகம் நிலைப்பாடில்லாத சமூகமாகவே எல்லோராலும் நோக்கப்படுகின்றது. நாளுக்கு நாள் முளைக்கும் புதிய கட்சிகளும் “பழைய சரக்கு புதிய லேபள்” என்றுதான் செயற்படுகின்றார்களே தவிர அவர்களிடத்திலும் புதிதாக எதனையும் எதிர்பார்க்க முடியாதுள்ளது. முஸ்லிம் மக்கள் இந்த நாட்டிலே பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கின்றவர்கள் அல்ல ஆனால் அதன் அர்த்தம் அவர்கள் சுந்தரமில்லாத மக்களாக இந்த நாட்டிலே வாழவேண்டும் என்பதல்ல.

முஸ்லிம் மக்களுடைய அரசியல் அபிலாஷை எதுவென்று கூறமுடியாத அளவிற்கு மக்கள் குழம்பிப் போயிருக்கின்றார்கள். இலங்கை முஸ்லிம் மக்களுக்கு தாம் இந்த நாட்டின் பிரஜைகளாக, சட்டத்தின் முன் சமமானவர்களாக, சமத்துவமானவர்களாக, வாழவே விரும்புகின்றார்கள், இது அரசியல் யாப்பு ரீதியாக உறுதி செய்யப்படுதல் அவசியமாகும்.

இலங்கை முஸ்லிம் மக்கள் செறிவாக ஒரு பூகோளப் பிரதேசத்தில் வாழாவிட்டாலும் இலங்கை பூராகவும் அவர்கள் பரந்து வாழ்கின்றார்கள். எனவே இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் இறைமை அல்லது அதிகாரம் உள்ளூராட்சிப் பிரதேச ரீதியாகவே நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே முஸ்லிம் மக்களின் உள்ளூராட்சி சார்ந்த இறைமை அதிகாரத்தை நாம் சரியாகப் பயன்படுத்தவும், அதனை நோக்கி முஸ்லிம் மக்களின் அரசியல் ஒழுங்கமைக்கவும் முயற்சிக்க வேண்டும்.அவ்வாறான உள்ளூராட்சி அதிகார அலகுகள் இணைந்து ஒரு பிராந்தியமாக அவை உருவாகவும் முடியும். இறைமை அதிகாரம் குறித்த சரியான நோக்கு இன்றி முஸ்லிம்களின் அரசியலை ஒழுங்கமைக்க முனைகின்றபோது வெறுமனே வாக்குப்பலத்தினால் மாத்திரம் தீர்மானிக்கப்படுகின்ற விடயமாக முஸ்லிம் அரசியல் மாறிவிடும்.

உச்சநீதிமன்றம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் விடயத்தில் முன்வைக்கத்துள்ள தீர்ப்பை நாம் சாதகாமவே நோக்க வேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம் மக்களுக்கான அரசியலை ஒழுங்கமைப்பதில் மேற்படித் தீர்ப்பை நாமும் கவனத்தில் எடுத்தல் அவசியமானதாகும் என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் முன்வைத்தார், அண்மையில் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இக்கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

Web Design by The Design Lanka