சமஷ்டி பிரிவினைக்கு வித்திடுமா அல்லது ஒற்றுமையைப் பலப்படுத்துமா? Y.L.S.ஹமீட் » Sri Lanka Muslim

சமஷ்டி பிரிவினைக்கு வித்திடுமா அல்லது ஒற்றுமையைப் பலப்படுத்துமா? Y.L.S.ஹமீட்

yls

Contributors
author image

S.Ashraff Khan

சமஷ்டி பிரிவினைக்கு வித்திடுமா அல்லது ஒற்றுமையைப் பலப்படுத்துமா? முஸ்லிம்களின் எதிர்காலம் என்ன? – வை.எல்.எஸ்.ஹமீட்

‘சமஷ்டி’ என்ற சொல் இன்று நாட்டில் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது.

தமிழ்த் தரப்பினரும் பெரும்பான்மை சமூகத்தில் அதிகாரப்பகிர்வை ஆதரிக்கின்றவர்களும் ‘சமஷ்டியைக்’ கோருகிறார்கள் அல்லது ஆதரிக்கின்றார்கள். அதே நேரம் தெற்கில் பலர் ‘ சமஷ்டி’ பிரிவினைக்கு இட்டுச் செல்லும்; எனும் அடிப்படையில் எதிர்க்கின்றார்கள்.

அண்மையில் வடமாகாண முதல்வர் ‘ சமஷ்டி பிரவினைக்கு இட்டுச் செல்லாது, மாறாக நாட்டின் ஒற்றுமைமையைப் பலப்படுத்தும்; என்று தெரிவித்திருக்கின்றார். முஸ்லிம் தரப்பினர் இது விடயத்தில் பொதுவாக மௌனம் காக்கிறார்கள், ஆனாலும் சிலர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ‘சமஷ்டியை’ ஆதரிக்கின்ற தொனியும் வெளிப்படுகின்றது.

சமஷ்டி என்றால் என்ன? அது பிரிவினையா? ஒற்றுமையா? என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க, அது இந்நாட்டு முஸ்லிம்கள் மீது செலுத்தப் போகும் தாக்கமென்ன? என்பதை முஸ்லிம் அரசியல் தலைமகள் முஸ்லிம்களுக்கு சொல்லவேண்டிய கடப்பாடு இல்லையா?

முஸ்லிம்களின் எதிர்கால இருப்போடு சம்மந்தப்பட்ட இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகமும் அதன் கல்விமான்களும் புத்திஜீவிகளும் பாரமுகமாக இருப்பது ஏன்?
‘அரசியலமைப்பு மாற்றம்’ தொடர்பான எனது தொடர்கட்டுரை இன்ஷாஅல்லாஹ், அடுத்த ஒருசில தினங்களில் அதன் 14ம் பாகத்தில் இருந்து வெளிவர இருக்கின்றது. ( ஏற்கனவே 13 பாகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன). அதில் சமஷ்டி மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பாக விரிவாக ஆரயப்பட இருக்கின்றது.

‘ சமஷ்டி’ பிரிவினைவாதம்தான் என்ற பல சர்வதேச சட்ட அறிஞர்களின் கருத்துக்களும் ‘சமஷ்டி’ பிரிவினை அல்ல, என்ற சட்ட அறிஞர்களின் கருத்துக்களும் அதில் உள்வாங்கப்பட இருக்கின்றன.

எனது எதிர்பார்ப்பு
—————–
காலத்தையும் நேரத்தையும் செலவுசெய்து எழுதப்படுகின்ற இவ்வாக்கங்கள் ‘ சமஷ்டி, சுயநிர்ணயம், அதிப்பட்ச அதிகாரப்பகிர்வு’போன்றவற்றால் முஸ்லிம்கள் மீது ஏற்படப் போகின்ற தாக்கங்களை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள உதவவேண்டும். அதன்மூலம் இத்தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அரசியல் ஏற்பாடுகளை சமூகம் செய்ய வேண்டும்.

இந்த விடயத்தில் சமூகத்தின் புத்திஜீவிகள், கல்விமான்கள் தங்களது முழுப்பங்களிப்பையும் செய்யவேண்டும். ஏனையவர்களும் சமூகவலைத் தளங்களில் இது தொடர்பாக ஒரு ஒருமித்த கருத்தினை ஏற்படுத்துவதற்கான ஒரு களத்தை உருவாக்க வேண்டும். அதிகாரப்பகிர்வு விடயத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது, ஆனால் ஏனோ அதனை நாம் புரிந்து கொள்கின்றோமில்லை. அதில் ஆர்வமும் காட்ட மறுக்கின்றோம்.

எனவே, நமது எதிர்கால சந்ததிக்காக, இந்த விடயத்தில் விளிப்படையுங்கள். ஒத்துழையுங்கள். இந்த அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, சுயநிர்ணயம் போன்ற விடயங்களில் உங்களது சந்தேகங்களை comment ஊடாகவோ அல்லது inbox இற்கோ அனுப்பிவைத்தால் அவற்றையும் கருத்தில் கொண்டு எனது கட்டுரைகளை வடிவமைக்க முடியும்.

இது கட்சி அரசியலுக்கப்பாற்பட்ட சமூக பாதுகாப்புக்கான ஒரு முயற்சி. இதில் ஒன்று படுவோம். சமூகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம், இன்ஷாஅல்லாஹ்.

Web Design by The Design Lanka