சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது - ஜனாதிபதி » Sri Lanka Muslim

சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

mai66

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

சமுர்த்தி அனுகூலங்களை குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சமுர்த்தி நன்மைகளை பெறத் தகுதியுடைய ஆனால் அது வழங்கப்படாத பெருந்தொகையானோர் நாட்டில் காணப்படுவதுடன், அவர்களுக்கு புதிதாக அந்த வரப்பிரசாதங்களை வழங்குவதனை தவிர்த்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்கனவே நன்மைகளை பெறுபவர்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் நீக்கப்படமாட்டாதென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

நேற்று (11) முற்பகல் எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

சமுர்த்தி நன்மைகளை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் தூண்டுதல்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பொதுமக்களின் நன்மைகளை கருதியே தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளுமென தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், விவசாய மக்கள் தமது பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்வதற்கும், தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக விவசாய துறையில் புதிய செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டின் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பினை அதிகரித்து அதனூடாக தேசிய பொருளாதாரத்தையும், விவசாயிகளின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எமது நாட்டின் விவசாயத்துறையில் புத்தாக்கத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு கண்கவர் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.

மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்தல் தொடர்பாக்க் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவற்றை எந்தவித தாமதங்களும் இன்றி நிறைவேற்ற வேண்டியது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் என்பதுடன், இவ்விடயத்தில் அரசியல் மற்றும் கட்சி பேதங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கருத்திற்கொண்டு செயற்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.

வரலாற்றில் உலகம் பூராகவும் மக்கள் தமது காணி உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டே பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பதை நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், அனைத்து இலங்கையர்களுக்கும் தங்களுக்கென்று காணி மற்றும் வீட்டின் உரிமையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றதெனவும் தெரிவித்தார்.

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய செயற்திட்டத்தின் கீழ் வளவை வலய விவசாயிகளுக்கு 5000 காணி உறுதிகள் இதன்போது வழங்கப்பட்டதுடன், அதனை ஆரம்பித்து வைக்கும் வகையில் ஜனாதிபதி அவர்களால் சில விவசாயிகளுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, தலதா அத்துகோரல, பிரதி அமைச்சர்கள் அநுராத ஜயரத்ன, கருணாரத்ன பரணவித்தான உள்ளிட்ட மாகாண அரசியல் பிரதிநிதிகளும், அரச உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

Web Design by The Design Lanka