சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோர்களாக சுயமாக முன்னேறக் கூடியவர்களாக மாற்றியமைப்பது அவசியம் - பிரதமர் மஹிந்த - Sri Lanka Muslim

சமுர்த்தி பயனாளர்களை தொழில் முனைவோர்களாக சுயமாக முன்னேறக் கூடியவர்களாக மாற்றியமைப்பது அவசியம் – பிரதமர் மஹிந்த

Contributors

சமுர்த்தி பயனாளர்களை கடன்கள் மற்றும் நிதி உதவிகளில் மாத்திரம் தங்கி வாழ்வோராக அன்றி தொழில் முனைவோர்களாக சுயமாக முன்னேறக் கூடியவர்களாக மாற்றியமைப்பதற்கான முறையொன்று அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்று (2021.03.15) முற்பகல் நிதி அமைச்சின் ரன்தொர கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இவ்விசேட கூட்டத்தின் நோக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கினார்.

சமுரத்தி கொடுப்பனவை பெறும், எனினும் அக்கொடுப்பனவு அவசியமற்றவர்களை நீக்குவதற்கு இதுவரை முறையான திட்டம் இல்லாத நிலையில், அவ்வாறான சமுர்த்தி பயனாளர்கள் வெளியேறும்போது அவர்களுக்கு 4 வீத சலுகை வட்டி விகிதத்தில் 5 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை எதிர்காலத்திலும் செயற்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 1762655 குடும்பங்கள் சமுர்த்தி கொடுப்பனவை பெறும் அதேவேளை, அதற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் 53000 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கு மேலதிகமாக 25000 சமுர்த்தி பெண் தொழில் முனைவோரை பலப்படுத்தும் வேலைத்திட்டம் 14000 கிராம சேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

500 உற்பத்தி கிராமங்களை ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் செயற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 50 கிராமங்களில் இதுவரை செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊனமுற்றவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் இதன்போது அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி செயலணி ஊடாக அனைத்து அமைச்சுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் ஆகியோரை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, பிரதமரின் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் கசுன் மாதுவகே, ஒருங்கிணைப்பு செயலாளர் துமீர தர்மவர்தன மற்றும் சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team