சமூகங்களை இணைக்கும் பாலமாக முஸ்லிம்கள் செயற்பட வேண்டும், சிங்கள மொழியை எதிர்கால சந்ததியினருக்கு கற்பித்தல் வேண்டும் - நீதி அமைச்சர் அலி சப்ரி - Sri Lanka Muslim

சமூகங்களை இணைக்கும் பாலமாக முஸ்லிம்கள் செயற்பட வேண்டும், சிங்கள மொழியை எதிர்கால சந்ததியினருக்கு கற்பித்தல் வேண்டும் – நீதி அமைச்சர் அலி சப்ரி

Contributors

ஏனைய சமூகங்களை இணைக்கும் பாலமாக முஸ்லிம்கள் செயற்பட வேண்டும். சகல சமூகங்களுடனும் சமாதானமாகவும் ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்து வந்த முஸ்லிம்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற நிலைமை மாற வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாமின் கவிதை நூல் வெளியீட்டு விழா கல்லொழுவையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஆயிரம் வருடங்களாக சகல சமூகங்களுடனும் சமாதானமாக ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்து வந்த முஸ்லிம்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற நிலைமை உருவானது.

இந்த நாட்டில் 80 வீதமானவர்கள் சிங்கள மொழியைப் பேசுகின்றவர்களாக உள்ளனர். ஆகவே நாம் சிங்கள மொழியை எமது எதிர்கால சந்ததியினருக்கு கற்பித்தல் வேண்டும். செய்திகளை இரு மொழிகளிலும் வெளிக் கொண்டுவரவும் இரு மொழிகளிலும் ஒரே கருத்தினைச் சொல்வதற்கும் நமது முஸ்லிம் ஊடகவியலாளர்கள் முன்வருதல் வேண்டும்.

சிங்கள மொழி ஊடகத்துறையில் எமது இளைஞர்கள் யுவதிகள் பணியாற்றுவதற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் வழிகாட்டல் வேண்டும்.

இந்த நாட்டில் இன, மத, குல மொழி வேறுபாடின்றி சகலரும் இந்த நாட்டின் இலங்கைப் பிரஜை எனும் கோட்பாட்டில் நாம் பயணிக்க வேண்டும். இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்கள் மத்தியில் இணைப்புப் பாலமாகவும் சமாதானமாகவும் நாம் பயணிப்போம் எனவும் அமைச்சர் அலி சப்ரி இதன்போது தெரிவித்தார்.

அஷ்ரப் ஏ சமத்

Web Design by Srilanka Muslims Web Team