சமையல் எரிவாயுவின் விலையை 700 ரூபாவினால் அதிகரிக்க அமைச்சிடம் கோரிக்கை..! - Sri Lanka Muslim

சமையல் எரிவாயுவின் விலையை 700 ரூபாவினால் அதிகரிக்க அமைச்சிடம் கோரிக்கை..!

Contributors

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 700 ரூபாவினால் அதிகரிப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


எனினும் அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததுடன், முன்வைக்கப்பட்டுள்ள விலை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு ஊடாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பது தொடர்பில் விரிவான ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.


இந்த விலை அதிகரிப்பு தொடர்பிலான கோரிக்கை குறித்து எமது செய்தி சேவை நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் வினவியது. இதற்கு பதில் வழங்கிய அந்த அதிகாரசபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க, சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.


இதேவேளை, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பிலும் அந்த நிறுவனங்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதற்கான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team