சம்பந்தன் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும் -ஜனாதிபதி - Sri Lanka Muslim

சம்பந்தன் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும் -ஜனாதிபதி

Contributors

 சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது’ என்று ஜனாதிபதி தனது தூதுவர் ஒருவர் ஊடாக தெரிவித்துள்ளதாக வார இறுதி ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்தியாவுக்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்விசனமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதிநிதி ஒருவர் மூலமாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் ஜனாதிபதி,தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதாவது இந்திய விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் அதிருப்தியை ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
 
‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் என்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்டது. கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர். அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம். சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது’ என தன்னுடைய பிரதிநிதி ஊடாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக குறித்த ஆங்கில வார இறுதி பத்திரிகையில் குறி்ப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
‘நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாங்கள் அரசியல் தீர்வொன்றிற்காக பாடுபடுகிறோம், இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அங்கு செல்கிறோம்’ என்று சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (vk)

Web Design by Srilanka Muslims Web Team