சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் சம்பியன் » Sri Lanka Muslim

சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் சம்பியன்

sp

Contributors
author image

அகமட் எஸ். முகைடீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஹர்ரம் ஐக்கிய உதைபந்தாட்ட கழகம் நடாத்திய அஷ்ரஃப் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணம் 2017 மென்பந்து கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்தினர் தனதாக்கிக் கொண்டனர்.

அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட குறித்த கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு இன்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை பொது மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது நிந்தவூர் அட்வெஞ்சர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்தினர் விளையாடினர்.

முஹர்ரம் ஐக்கிய உதைபந்தாட்ட கழகத்தின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எச்.எம். புவாட் தலைமையில் நடைபெற்ற இவ் இறுதிப்போட்டி நிகிழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம். உபுல் பியலால், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, விளையாட்டு உத்தியோகத்தர், இளைஞர் சேவை அதிகாரி எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நிந்தவூர் அட்வெஞ்சர் விளையாட்டுக் கழகத்தினர் களத் தடுப்பில் ஈடுபட சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றனர். வெற்றி இலக்கான 75 ஒட்டங்களை பெறும்வகையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் அட்வெஞ்சர் விளையாட்டுக் கழகத்தினர் 3 பந்து வீச்சுக்கள் மீதம் இருக்கும் நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இப்போட்டியில் மேலதிக 17 ஓட்டங்களால் சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகத்தினர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனுக்கான விருதை சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழக வீரர் எம். றிகாசும்;, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழக அணித் தலைவர் எம். சிப்ராக்கும் பெற்றுக் கொண்டனர்.

sp

Web Design by The Design Lanka