சரத் வீரசேகரவின் கருத்து உண்மையா? பொய்யா? - ஆராய வேண்டும் என்கிறது சிங்கள ராவய..! - Sri Lanka Muslim

சரத் வீரசேகரவின் கருத்து உண்மையா? பொய்யா? – ஆராய வேண்டும் என்கிறது சிங்கள ராவய..!

Contributors
author image

Editorial Team

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்தை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது என சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அதே போன்று நௌபர் மௌலவி தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்தால், நாம் அவற்றை நிச்சயமாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றுகின்ற உரைகள் அனைத்தும் அரசியலை மையப்படுத்தியவை அல்லவா? எனினும் நாட்டின் தேசிய பாதுகாப்பில் அக்கறை கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் சரத் வீரசேகரவினால் வெளியிடப்படும் கருத்துக்களை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது அல்லவா? ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கிறார் என்று கருதுகின்றேன்.

ஆகவே இது உண்மையா? அல்லது பொய்யா? என்பது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதுமாத்திரமன்றி இதுவிடயத்தில் அமைச்சர் சரத் வீரசேகர பொறுப்புணர்வின்றி கருத்துக்களை வெளியிடுவார் என்றும் தோன்றவில்லை.

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சியினருக்கும் ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் இதுபற்றிய போதிய தெளிவில்லை.

விரிவாக ஆராய்ந்த பின்னர் உருவாகக்கூடிய அறிவுபூர்வமான நிலைப்பாடுகள் எவையும் அவர்களிடம் இல்லை. ஆகவே அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்தை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது. அதேபோன்று நௌபர் மௌலவி தொடர்பில் எமக்கு ஏதேனும் தகவல்கள் கிடைக்குமானால், நாம் அதனை நிச்சயமாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team