சர்ச்சையை ஏற்படுத்திய புனித க/பாவின் புதிய பூட்டு - Sri Lanka Muslim

சர்ச்சையை ஏற்படுத்திய புனித க/பாவின் புதிய பூட்டு

Contributors

சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த புனித கஃபதுல்லாஹ்வின் புதிய பூட்டு மற்றும் திறவுகோல் அதன் சிரேஷ்ட காவலர் (சாதின்) ஷெய்க் அப்துல் காதர்அல் ஷைபியிடம் கையளிக்கப்பட்டது.

பல நாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கஃபாவை கழுவும் சம்பிரதாய நிகழ்வின்போதே அதன் திறவுகோலை மக்கா நகர ஆளுநர் இளவரசர் காலித் அல் பைஸல் சிரேஷ்ட காவலரிடம் கையளித்தார்.

காலஞ்சென்ற கஃபா சிரேஷ்ட காவலர் ஷெய்க் அப்துல் அஸிஸ் அல் ஷைபியின் கோரிக்கைக்கு அமையவே 30 ஆண்டுகளுக்கு பின் கஃபா திறவுகோல் புதிதாக தயாரிக்கப்பட்டது. ஆனால் புதிய திறவுகோல் மாற்றப்படுவது குறித்து தம்மை அறிவுறுத்தவில்லை என்று தற்போதைய காவலர் அப்துல் காதர்அல் ஷைபி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இரு புனித பள்ளிவாசல்களின் பொதுத் தலைவர் அப்துல் ரஹ்மான் அல் சுதைசி கஃபாவின் புதிய திறவுகோலை தாம் இல்லாத தருணத்தில் மேற்பார்வையிட்டதாக கூறியே ஒரு மாதத்திற்கு முன்னர் அப்துல் காதர்அல் ஷைபி அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

புனித கஃபாவை கழுவுதல், கிஸ்வா (போர்வை) மாற்றுதல், திறவுகோல் உட்பட கஃபா தொடர்பான அனைத்து விவகாரங்களும் பொதுத் தலைவருக்கன்றி, காவலர்களின் கவனத்திற்கே வர வேண்டும் என்று அப்போது அப்துல் காதர்அல் ஷைபி கூறியிருந்தார்.

“காவலரின் பணியை ஒதுக்குவது அவர்களது உரிமையை மீறும் செயலாகும்” என்றும் சிரேஷ்ட காவலர் விசனம் தெரிவித்திருந்தார்.

எனினும் முன்னாள் சிரேஷ்ட காவலரின் பரிந்துரைக்கு அமைய அரசு ஆணைப்படி கடந்த 2009ஆம் ஆண்டிலேயே புதிய திறவுகோல் தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக இரு புனித பள்ளிவாசல்களின் பொதுத் தலைவர் சார்பில் நியாயம் கூறப்பட்டது.

உண்மையில் ஹிஜ்ரி 1429 ஷஹ்பான் முதலாம் திகதி அப்போது சிரேஷ்ட காவலராக இருந்த காலஞ்சென்ற ஷெய்க் அப்துல் அஸிஸ் அல் ஷைபி கஃபாவை கழுவ அதன் பூட்டை திறக்க சிரமத்தை எதிர்கொண்டார். எனவே அதனை சுட்டிக்காட்டி புனித பள்ளிவாசலின் பொறுப்பாளரான மன்னர் அப்துல்லாஹ்வுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்திலேயே பூட்டை மாற்றுவது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். இந்த தகவலை இரு புனித பள்ளிவாசல்களின் பொதுத் தலைவரின் பேச்சாளர் அஹ்மத் அல் மன்சூரி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சாதின் என அழைக்கப்படும் கஃபா வாயிற்காவலரின் வரலாறு நீண்டதாகும். இறைத்தூதர் முஹம்மத்நபி (ஸல்) அவர்கள் புனித கஃபாவின் பூட்டை அவரது தோழரான உஸ்மான் பின் தல்ஹாவிடம் வழங்கப்பட்டது தொடக்கம் அவரது சந்ததியினரே சாதின் பட்டத்தை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக கஃபா வாயிற் காவலர் பொறுப்பு ‘அல் ஷைபி’ குடும்பத்தினருக்கே வழங்கப்படுகிறது. இவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் இருந்தே இந்த பொறுப்பை வகிக்கின்றனர்.

சாதாரணமாக கஃபாவின் திறவுகோல் அதன் சிரேஷ்ட காவலரிடமே இருக்கும். முன்னர் புனித கஃபா வாரத்தில் திங்கள், வியாழக்கிழமைகளில் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது இஸ்லாமிய விழாவை ஒட்டி ஆண்டுக்கு இரு முறை மாத்திரமே திறக்கப்படுகிறது. பெருமளவான அதிகாரிகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்படும் கஃபா ஸம்ஸம் நீர் மற்றும் பன்னீர் கொண்டு கழுவப்படுகிறது.

புனித கஃபாவுக்கான புதிய பூட்டை மன்னர் அப்துல்லாஹ்வின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நகர் என்ற நிறுவனம் தயாரித்தது. நிக்கல் உலோகத்தினால் தயாரிக்கப்பட் இந்த பூட்டு 18 கரட் தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட பழைய பூட்டு புனித பள்ளிவாசல்களின் கண்காட்சி மையத்தில் வைக்கப்படவுள்ளது.

புதிய பூட்டு மற்றும் திறவுகோல் கஃபா சிரேஷ்ட வாயிற் காவலரிடம் கையளிக்கப்பட்டிருப்பதால் கடந்தகால குழப்பங்கள் முடிவுக்கு வந்தது.tn

Web Design by Srilanka Muslims Web Team