சர்ச்சையை கிளப்பியசுகாதார அமைச்சின் உயர் அதிகாரி,பதவியில் இருந்து அகற்றுமாறு கோரிக்கை..! - Sri Lanka Muslim

சர்ச்சையை கிளப்பியசுகாதார அமைச்சின் உயர் அதிகாரி,பதவியில் இருந்து அகற்றுமாறு கோரிக்கை..!

Contributors

சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்ட “3 ஆம் தர ” கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்களின் உரிமைக் குழுக்கள் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் துணைப் பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் “கடந்த காலங்களில் கொல்லப்பட்ட சில ஊடகவியலாளர்கள் “3 ஆம் தர ” ஊடகவியலாளர்கள் என்று ஒரு ஊடக மாநாட்டின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரது கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வலுவான எதிர்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவும் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

ஒரு ஊடகவியலாளரை அல்லது யாரையும் கொல்ல எந்தக் காரணமும் கூற முடியாது.இந்தக் கருத்துக்கள் தமது தந்தையைப் போன்றவர்களின் கொலைகளை இந்த அரசாங்கம் கொண்டாடுகிறது என்பதற்கு மேலதிக சான்றுகளாகும் என அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஹேமந்த ஹேரத்தை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி ஹேமந்த ஹேரத்திடம் ஊடகவியலாளர்கள் பலமுறை கேள்வி கேட்டபோது அவர் கோபமடைந்ததாக ஊடக உரிமைகள் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன் போது ஹேமந்த ஹேரத் ஒரு செய்தியாளரிடம், செய்தியாளர்கள் மூன்றாம் தர நடத்தையை நாடக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதன்போது கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சில செய்தியாளர்களும் மூன்றாம் தர செய்தியாளர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹேமந்த ஹேரத் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடக உரிமைகள் குழுக்கள் கோரியுள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா அமைப்பு மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் என்பன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team