'சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிடின் நாடு மூழ்குமென்ற ஜனாதிபதியின் எச்சரிக்கையை எவரும் அலட்சியம் செய்யக் கூடாது' - நஸீர் அஹ்மட்! - Sri Lanka Muslim

‘சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிடின் நாடு மூழ்குமென்ற ஜனாதிபதியின் எச்சரிக்கையை எவரும் அலட்சியம் செய்யக் கூடாது’ – நஸீர் அஹ்மட்!

Contributors

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிடின், முழு உறுப்பினர்கள் மட்டுமல்ல நாடும் மூழ்குமென்ற ஜனாதிபதியின் எச்சரிக்கையை எவரும் அலட்சியம் செய்யக்கூடாது என சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டவர் புதிய ஜனாதிபதி ஆனால் இத்தெரிவில் ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதற்கமைய அவரது உரையும் ஜனநாயகத்தை உயிரூட்டுவதாக இருந்தது.

இலங்கையர் என்ற உணர்வில் சிந்தித்து சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி அழைத்திருப்பது எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை கட்டியெழுப்பவே, இதில் அரசியல் அனுகூலங்கள் கைவிடப்பட வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

இதனால் இருண்ட இலங்கைக்குள் ஒளிந்திருக்காது ஒரு ஒளிச்சுடரை ஏற்றுவதற்காகத்தான் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமல்ல பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் அவரது உரையில் தீர்வு இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிடின், முழு உறுப்பினர்கள் மட்டுமல்ல நாடு மூழ்குமென்ற அவரது எச்சரிக்கையை எவரும் அலட்சியம் செய்யக்கூடாது.

மேலும், பல முன்னுதாரங்களை குறிப்பிட்டு அவர் வழங்கிய விளக்கவுரை பொருளாதார வல்லுநர்கள், அரசியல் அனுபவசாலிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் எடுத்தெறிந்த போக்கில் எல்லாவற்றையும் எதிர்க்கும் அரசியல் கலாசாரத்தால் வந்த விளைவை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக மயப்படுத்தபட்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது மனையியல் பொருளாதாதரத்துக்கு அடித்தளமிடும். இந்த வியூகமே எதிர்கால பொருளாதாரத்தில் விசேடம் பெறவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் காலடியிலுள்ள பொருளாதார பலத்தை, இந்து சமுத்திர தேசத்தின் காலடியில் கொண்டுவரும் அவரது திட்டத்துக்கு பிராந்திய நாடுகளின் பங்களிப்பும் கோரப்பட்டிருக்கிறது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் மீண்டெழ இலங்கை முயற்சிப்பது இதற்காகவே! இறக்குமதியை இறுக்கி, ஏற்றுமதியை உயர்த்தும் உன்னத இலட்சியத்துக்காகவே சர்வகட்சி அரசாங்கத்துக்கு முயற்சிக்கப்படுகிறது.

எனவே, ஜனாதிபதியின் உரையிலுள்ள யதார்த்தங்களை சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியென்ற வகையில், என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team