சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கு சாதகமான பதில் - ரவூப் ஹக்கீம்! - Sri Lanka Muslim

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கு சாதகமான பதில் – ரவூப் ஹக்கீம்!

Contributors

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஒத்துழைப்பை வழங்குமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கட்சிகளின் யோசனைகளை கோரியுள்ள ஜனாதிபதிக்கு சாதகமான பதிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்குமென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் பல்வேறு விடயங்கள் பாராட்டுக்குரியவை.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சிந்தனைகள் அதில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் அவரது உரையில் வெளிப்பட்டன.

அனைத்து தரப்பினரதும் யோசனைகளை பெற்றுத் தருமாறு இப்போதும் அவர் கடிதம் மூலம் எமக்குத் தெரிவித்துள்ளார்.

அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ஆலோசனைகளுடன் மேலும் சில விடயங்களை உள்ளடக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நாம் எமது யோசனைகளை அவருக்குத் தெரிவிக்கவுள்ளோம்.

அதன் பின்னர் எதிர்க்கட்சியில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான உரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்வோம்.

நாம் கட்சி ரீதியாக ஜனாதிபதியின் கடிதத்திற்குப் பதில் வழங்கத் தயாராக வுள்ளோம். அதன் பின்னர் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு தீர்வு பெற்றுக் கொள்வதில் ஒத்துழைப்பு வழங்குவோம்.

அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி மேற்கொள்ளும் சிறந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை எமது கட்சியின் ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team