சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை : மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் மங்கள சமரவீர - Sri Lanka Muslim

சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை : மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார் மங்கள சமரவீர

Contributors

எம்.மனோசித்ரா)

சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளது என எச்சரித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கிணற்று தவளைகளாக வாழ்வதில் எந்த பயனும் கிடையாது. இதனை மையப்படுத்தியே தற்போது அரசாங்கத்தின் போக்கு காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார்.

பத்தரமுல்ல – கோட்டே சோலிஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 இல் நிறைவடைந்ததன் பின்னர் பல உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்தன.

மறுபுறம் ஒரு மீறல்களை மையப்படுத்தி விசாரணைகளுக்கும் வலியுறுத்தின. குறிப்பாக வெள்ளை கொடி விவகாரம் போன்ற சம்பவங்களை மையப்படுத்தி விசாரணைகளை சர்வதேசம் வலியுறுத்தியது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளிலும் இவ்வகையான உள்ளக விசாரணைகள் குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது.

2014 க்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் எதிர்ப்பையும் மீறி சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றை இலங்கைக்கு எதிராக முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

அதிஷ்டவசமாக 2015 இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்று இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கையை தடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றவுடன் டெல்லிக்குச் சென்று அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்தினேன்.

அடுத்ததாக ஜெனீவா சென்று அப்போதைய ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக செயற்பட்ட ஷெயிட் ராட் அல் ஹூசைனை சந்தித்து ஆட்சி மாற்றம் குறித்தும் ஆரோக்கியமானதும் நம்பகமானதுமான இலங்கையின் முன்னெடுப்பு திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினேன்.

இதன்போது குறிப்பாக இலங்கை குறித்து சர்வதே விசாரணை பொறிமுறைக்கான தீர்மானத்தை இம்முறை சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் கால அவகாசம் தருமாறும் கோரினேன். இதனை ஏற்றுக்கொண்டு எமக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

உண்மையாகவே இந்த காலப்பகுதியை இலங்கையின் இராஜதந்திர கொள்கையின் பொற் காலமாகவே கருத முடியும். இதன் பின்னரே 2016 இல் 30/1 தீர்மானத்தை முன்வைத்து இணை அனுசரனை வழங்கினோம்.

இந்த தீர்மானம் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அனைத்து உள்ளடக்கங்களும் அவரது அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதே சமூகம் இலங்கை மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக பல நன்மைகள் கிடைக்கப் பெற்றன.

தடைபட்டுப் போயிருந்த ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை என்பன கிடைக்கப் பெற்றன. ஆகவே கிணற்று தவளைகள் போல் வாழ்ந்து விட முடியாது என்பதை நாம் அறிய வேண்டும்.

உள்நாட்டு மக்களை ஏமாற்றுவதைப் போன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்றிவிட முடியாது. பொருளாதாரம், சர்வதேசம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை தற்போதுள்ளது.

சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளது. இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team