சர்வதேச ஒத்துழைப்பு, நட்புறவின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள ஜனாதிபதி உறுதி » Sri Lanka Muslim

சர்வதேச ஒத்துழைப்பு, நட்புறவின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள ஜனாதிபதி உறுதி

maith

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

தெற்காசியாவின் விசாலமான சிறுநீரக மருத்துவமனைக்கு பொலன்னறுவையில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்….


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கோரிக்கையின் பேரில் சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக 12,000 மில்லியன் செலவில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு நேற்று (06) முற்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி அவர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மருத்துவமனை தெற்காசியாவிலேயே விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக நிர்மாணிக்கப்படவுள்ளது. பொலன்னறுவை தள மருத்துவமனையை அண்மித்த 28 ஆம் கட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கான நிதி சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட மத்திய மாகாணத்தில் மட்டுமன்றி நாடெங்கிலும் உள்ள சிறுநீரக நோயாளிகளுக்காக நிர்மாணிக்கப்படும் இந்த மருத்துவமனை நவீன பரிசோதனை கூடத்தினையும் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டதாகும். சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை, குருதி சுத்திகரிப்பு சேவை உள்ளிட்ட சிகிச்சைகளும், மருத்துவ ஆய்வுகூட சேவைகள், ஆலோசனை சேவைகள் போன்ற சேவைகளும் இவ் வைத்தியசாலையின் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஆரம்ப சிகிச்சை பிரிவுடன் கூடிய வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, 200 படுக்கை வசதிகளை கொண்ட தங்குமிட சிகிச்சைப் பிரிவு, 100 குருதி சுத்திகரிப்பு வசதியுடைய கட்டில்கள், நவீன வசதிகளைக் கொண்ட சத்திர சிகிச்சைக் கூடம், இரு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் இரத்த வங்கி என்பனவற்றைக் கொண்டதாக இந்த மருத்துவமனை நிர்மாணிக்கப்படவுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இன்று இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் நட்புறவின் ஊடாக நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். அன்று நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பாரிய சவாலாகக் காணப்பட்ட, நாட்டிற்கு கிடைக்காதிருந்த சர்வதேச ஒத்துழைப்பினை கடந்த மூன்று வருட காலத்தினுள் சிறப்பாக பெற்றுக்கொள்ள தம்மால் முடிந்துள்ளது என்றும் இன்று எமது தேசத்திற்கு கிடைத்துள்ள இந்த சர்வதேச வரவேற்பானது தனது அண்மைக்கால வெளிநாட்டு விஜயங்களினூடாக தெளிவாக உறுதியாகின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது எத்தகைய அவதூறுகள் கூறப்பட்டாலும் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அபிவிருத்தியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதென தெரிவித்ததுடன் விவசாயம், கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட சகல துறைகளிலும் விரிவான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நட்பு நாடான சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், 2015 ஆம் ஆண்டில் தாம் சீனாவிற்கு விஜயம் செய்தபோது சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த விசேட பரிசு தொடர்பாக சீன ஜனாதிபதி உள்ளிட்ட சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார ஆகியோரும் இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியென்லியங் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொலன்னறுவை பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படும் பாரிசவாத சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டல் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. வாதம் மற்றும் புனர்வாழ்வு மையம், உடற்கூற்று சிகிச்சைப் பிரிவு, பாரிசவாதம் மற்றும் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு என்பவற்றைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த பாரிசவாத மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கான மொத்த செலவு 400 மில்லியன் ரூபாவாகும். ”எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின்” மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினை 548 நாட்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கான நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி அவர்கள், கட்டிடத்தின் வரைபடத்தையும் பார்வையிட்டார்.

பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார உள்ளிட்ட மருத்துவமனை உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Web Design by The Design Lanka