சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை - இலங்கை கிரிக்கெட் சபை - Sri Lanka Muslim

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை – இலங்கை கிரிக்கெட் சபை

Contributors

இலங்கை கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலிடம் (ஐ. சி. சி) 8 மில்லியன் டொலர் வட்டியில்லா கடனைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அதன் செயலாளர் நிஷாந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடன் மூலம் அரச வங்கியான இலங்கை வங்கிக்குக் கொடுக்க வேண்டிய 10.1 மில்லியன் டொலர் கடன் தொகையின் பெரும் தொகையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்கு முன்னரே இந்த கடனைப் பெறுவதற்கான கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் சபை ஐ. சி. சி யிடம் விடுத்திருந்தது. இந்தக் கடனுக்கு அங்கீகாரம் வழங்க சொத்து மற்றும் நிதிப் பொறுப்புகளை இலங்கை கிரிக்கெட்டிடம் இருந்து ஐ. சி. சி. கோரி வருவதாக செய்திகள் கூறுகின்றன. எனினும் இது குறித்து ஐ. சி. சி. கருத்து வெளியிட மறுத்துள்ளது.

“இலங்கை வங்கியிடம் இருக்கும் கடனை கட்டுவதற்கு நாம் 8 மில்லியன் டொலர் கடன் கோரியிருக்கிறோம்” என்றும் ரணதுங்க குறிப்பிட்டார்.

“இது குறித்து நாம் ஜனவரி இறுதியில் டுபாயில் ஐ. சி. சி.யை சந்திக்க விருக்கிறோம். எனவே நாம் அவர்களின் பதிலுக்காக எதிர்பார்த்திருக்கிறோம். தற்போதைய சூழலில் நிலைமை சாதகமாகவே உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

முன்னர் இருபது-20 உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான 2.5 மில்லியன் டொலர் செலவுக்காக இலங்கை கிரிக்கெட் ஐ. சி. சி. இடம் உதவி கோரியதற்கு அமைய ஐ. சி. சி. இலங்கை கிரிக்கெட்டுக்கு ஒரு மில்லியன் டொலர் அளவில் நேரடி கடனாகவும் 500,000 டொலர் மானியமாகவும் வழங்கியது.

கடந்த 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இரு புதிய மைதானங்களை அமைக்க இலங்கை வங்கியிடம் 22.5 மில்லியன் டொலர் அளவு கடன்பட்டுள்ளது. இதில் 12 மில்லியன் டொலர் தொகையை சபை மீளச் செலுத்தியிருப்பதாக இலங்கை கிரிக்கெட் பொருளாளர் நுஸ்கி மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

தவிர அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திடம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு 4.2 மில்லியன் டொலர் கடன் உள்ளது. ஆனால் இந்தக் கடனை அகற்றிக் கொள்ளும்படி இலங்கை கிரிக்கெட் சபை அரசிடம் கோரியுள்ளது.

“மைதான கட்டுமானம் தொடர்பில் ஒரு சில தகவல்களை ஐ. சி. சி. எதிர்பார்த்துள்ளது” என்று கூறிய மொஹமட் இதில் அரசு நிதி வழங்கியதால் அது குறித்து ஐ. சி. சி. விபரம் கேட்கிறது. இலங்கை கிரிக்கெட் இந்தக் கட்டுமான செலவை விடவும் மேலதிக தொகை கேட்பதை தவிர்க்க ஐ. சி.சி. பரிசீலனை செய்து வருகிறது” என்றார்.

“இந்த கடனை (அரச பொறியியல் கூட்டுத்தாபனம்) வழங்கப் போவதில்லை என்று அரசு வாய்மூலம் கூறியபோதும் எழுத்து மூலம் எமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை” என்று மொஹமட் விபரித்தார்.

இந்நிலையில் ஜனவரியில் இடம்பெறும் ஐ. சி. சி.யுடனான சந்திப்பின் போது ஐ. சி. சி. தலைமையகத்தை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்தும் இலங்கை கிரிக்கெட் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தற்போது டுபாயில் இருக்கும் ஐ. சி.சி. தலைமையக கட்டிடத்தின் ஒப்பந்த காலம் 2017 உடன் முடிவடையவுள்ள நிலையிலேயே தலைமையகத்தை இடமாற்ற ஐ.சி. சி. ஆலோசித்து வருகிறது.

இதனையடுத்தே தலைமையகத்தை இலங்கைக்கு கொண்டு வர இலங்கை கிரிக்கெட் கோரிக்கை விடுத்தது. தலைமையகம் இங்கு கொண்டுவர வரி சுமையில் இருந்து வடுவிக்கவும் இலங்கை அரசு அண்மையில் உறுதி அளித்தது. வரி சுமையைக் குறைக்கவே ஐ. சி. சி. தனது தலைமையகத்தை டுபாய்க்கு கொண்டு சென்றது குறிப்பிடத் தக்கது.

“ஐ. சி. சி. யை இங்கு கொண்டுவர எமது விருப்பை வெளிக்காட்டி இருக்கிறோம். அதற்காக எம்மால் வழங்க முடியுமான அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்து வருகிறோம்” என்று ரணதுங்க குறிப்பிட்டார்.

-thinakaran

Web Design by Srilanka Muslims Web Team