சர்வாதிகாரிகளின் சொகுசு கார்கள் – சிறப்பு தொகுப்பு (புகைப்படம்) - Sri Lanka Muslim

சர்வாதிகாரிகளின் சொகுசு கார்கள் – சிறப்பு தொகுப்பு (புகைப்படம்)

Contributors

அதிகாரத்தால் மக்களை ஆட்டிப் படைத்து வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சர்வாதிகாரிகளில் பெரும்பலானோர் சொகுசு கார்கள் மீது தீராத பிரியம் வைத்திருந்தனர். இதற்கு அவர்களிடமிருந்த பெரும் எண்ணிக்கையிலான சொகுசு கார்களே சான்றாக இருக்கின்றன. ஹிட்லர் முதல் கடாஃபி வரை கார் என்றால் அவர்களுக்கு கொள்ளை பிரியம்.

சில சர்வாதிகாரிகள் பெரும் எண்ணிக்கையிலான கார்களை வைத்திருப்பதை பெருமையாகவும், அந்தஸ்தின் சின்னமாகவும் கருதியுள்ளனர். இந்த செய்தித் தொகுப்பில் உலகின் மிக பிரபலமான சர்வாதிகள் கையில் இருந்த கார்களின் விபரங்களை காணலாம்.

அடால்ஃப் ஹிட்லர் 
பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல வசனத்துக்கு சொந்தக்காரரான ஹிட்லர் பென்ஸ் கார் பிரியர். அவரது வாழ்நாளில் மொத்தம் 9 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை வைத்திருக்கிறார். 

ஹிட்லரின் செல்லப்பிள்ளை 
அணிவகுப்புகளின்போது பெரும்பாலும் 1939 மாடல் பென்ஸ் 770கே காரைத்தான் ஹிட்லர் பயன்படுத்துவது வழக்கம். ஃபோக்ஸ்வேகன் மற்றும் அந்த நிறுவனத்தின் பீட்டில் கார் பிரபலமாவதற்கும் முக்கிய காரணகர்த்தா ஹிட்லர் என்பதும் கூடுதல் தகவல். 

பெனிட்டோ முசோலினி
த்தாலிய சர்வாதிகாரியாக கொடி கட்டி பறந்த முசோலினி ஆல்ஃபா ரோமியோ பிராண்டின் அதிதீவிர ரசிகர். 1937ம் ஆண்டு 2300எம்எம் ஆல்ஃபா ரோமியோ கார் மாடல் அவர் பயன்படுத்தியிருக்கிறார். இந்த கார் இ-பே ஆன்லைன் ஏல நிறுவனம் மூலம் 1,20,000 டாலருக்கு ஏலம் போனது. 

முசோலினியின் கார் 
படத்தில் காணும் 1939ம் ஆண்டு மாடல் லான்சியா ஆஸ்ட்ரா காரைத்தான் அணிவகுப்புகளின்போது முசோலினி பயன்படுத்தியிருக்கிறார். 

விளாடிமிர் லெனின் 
சோவியத் யூனியனின் முதல் தலைவரான லெனின் ரோல்ஸ்ராய்ஸ் பிரியர். தனது வாழ்நாளில் ஒரு டஜனுக்கும் அதிகமான ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருந்தார். அதில், ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட் லெனினை மிகவும் கவர்ந்த கார். மேலும், அந்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு தக்கவாறு சில விஷேச அம்சங்களுடன் அந்த காரை கஸ்டமைஸ் செய்து வைத்திருந்தார். 

லெனின் காரின் விசேஷம் 
சோவியத் யூனியனில் கடும் குளிர்காலங்களில் ஆல்கஹாலை போட்டு காரை ஓட்டுவாராம். ஏனெனில், கடும் குளிர்காலங்களில் பெட்ரோலைவிட ஆல்கஹாலில் கார் எஞ்சின் சிறப்பாக இயங்கும். இதேபோன்று, பனிக்காலங்களில் சாலைகளில் பனிக்கட்டிகள் படர்ந்திருக்கும் சமயங்களில் செல்வதற்கு ஏதுவாக காரின் பக்கவாட்டுப் பகுதியில் கேட்டர்பில்லர் டிராக்ஸ் எந்திரத்தை பொருத்தியிருந்தார். 

ஜோஸப் ஸ்டாலின் 
ஸ்டாலினிடம் ஏராளமான கார்கள் இருந்துள்ளன. அமெரிக்க பிராண்டுகளான பேக்கார்டு, கேடில்லாக் கார்களை வைத்திருந்துள்ளார். இவருக்கு 1937ம் ஆண்டு மாடல் பேக்கார்டு வி12 காரை அமெரிக்க அதிபர் ஃப்ராங்களின் எஸ் ரூஸ்வெல்ட் பரிசாக கொடுத்துள்ளார். படத்தில் பேக்கார்டு அடிப்படையில் சோவியத் யூனியனில் வடிவமைக்கப்பட்ட 1942 பேக்கார்டு சூப்பர் எயின் காரை பார்க்கிறீர்கள். 

இடி அமீன் உகாண்டா 
நாட்டின் சர்வாதிகாரியான இடி அமீன் ஆயிரக்கணக்கான கார்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை அந்நாட்டில் இருந்து வெளியேறிய இந்திய வம்சாவளியினர் விட்டுச் சென்ற கார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இடி அமீனுக்கு பென்ஸ் புல்மேன் கார் மீதுதான் கொள்ளை பிரியமாம். படத்தில் அவர் பயன்படுத்திய புல்மேன் காரை காணலாம். 

இடி அமீன் 
ஜீப் அணிவகுப்புக்கு பெரும்பாலும் ஜீப்பில் செல்வதை இடி அமீன் வழக்கமாக கொண்டிருந்தார். 

சதாம் உசேன் 
ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருந்துள்ளன. 60 க்கும் மேற்பட்ட கார்களை அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலானவை போரினால் சேதமடைந்துவிட்டதாம். 

சதாம் உசேன் கார் 
தனி பயன்பாட்டுக்கு தவிர கார் கலெக்ஷனிலும் சதாமுக்கு ஆர்வம் இருந்துள்ளது. வின்டேஜ் கார்கள், சொகுசு கார்கள் என சேகரித்துள்ளார். போரின்போது இவை அனைத்தும் பாதாள பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்ததாம். 

அல் கடாஃபி 
சமீபத்தில் மரணமடைந்த லிபிய சர்வாதிகாரி அல் கடாஃபியும் சொகுசு கார்கள் மீது ஆர்வம் கொண்டவர்தான். ஆனால், கார்கள் மீதான அவரது டேஸ்ட் மிக மோசமானது என அவருடன் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் ஒன்று மட்டும் விதிவிலக்காக லிபியன் ராக்கெட் எனப் பெயர் கொண்ட கார் சிறப்பான டிசைன் கொண்டதாக இருந்துள்ளது. இதை அவர் மிகவும் நேசித்தாராம். 

என்னதான் அதிகாரம், அடக்குமுறை, பந்தா, படாடோபமாக வாழ்ந்தாலும் பெரும்பாலான சர்வாதிகளின் முடிவுரை ‘கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான்’ என்ற பழமொழிக்கு ஏற்பவே மிக மோசமானதாக முற்று பெற்றுள்ளது.(nad np)

Web Design by Srilanka Muslims Web Team