சவுதி: ஜெட்டாவில் ஆயிரக் கணக்கில் பிடிபட்ட தொழிலாளர்கள் - Sri Lanka Muslim

சவுதி: ஜெட்டாவில் ஆயிரக் கணக்கில் பிடிபட்ட தொழிலாளர்கள்

Contributors

சவுதி அரேபியாவில் தங்கியிருந்து வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களின் தொழில் அனுமதி ஆவணங்களை சட்டபூர்வமாக்கிக் கொள்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இருந்த காலக்கெடு போதவில்லை என்று கூறுகின்றனர்.

ஜெட்டாவில் இன்று ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலிஸ் வாகனங்களில் அள்ளிச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த பெருமளவிலான ஆசிரியர்கள் கற்பித்துவந்ததால் அவர்களின் தொழில் ஆவணங்களை இன்னும் சட்டபூர்வமாக்கிக் கொள்ள முடியாமல் போனதால் பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. நகரங்களில் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

பிடிபட்டால் அபராதம் அல்லது சிறைத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் சட்ட ஆவணங்கள் இல்லாதுள்ள தொழிலாளர்கள் பலர் ஓடி ஒளித்துக்கொண்டுள்ளார்கள்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களில் தங்கியிருப்பதை தடுப்பதற்கு சவுதி அரேபியா நீண்டகாலமாக முயன்றுவருகிறது.

சவுதி மக்கள் செய்ய விரும்பாத சிறுசிறு தொழில்களை செய்துவந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான் அரசாங்கத்தின் இந்த புதிய நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவுதியில் தொழில்செய்துவந்த இலங்கையர்களின் நிலை என்ன, அவர்களில் எத்தனை பேருக்கு குறிப்பிட்ட பொது மன்னிப்புக் காலத்துக்குள் நாடுதிரும்ப முடிந்துள்ளது என்று ஜெட்டாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் எம்.பி.எம். ஸரூக் அவர்களிடம் தமிழோசை கேட்டது.

ஜெட்டாவில் பகுதியிலிருந்து நாடு திரும்புவதற்கு ஜித்தா துணைத் தூதரகத்தில் சுமார் 10,500 பேர் வரையிலான இலங்கையர்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும், அவர்களில் நாடு திரும்பியவர்கள் போக 1200 பேர் வரையில் எஞ்சியுள்ளதாகவும் எம்.பி.எம். ஸரூக் கூறினார்.

2007-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த சட்டப்படி சவுதிக்குள் வந்த 700 பேருக்கு மன்னிப்புக் காலம் பொருந்தாது என்றும் அவர்களில் ஹஜ் பயணமாக வந்துள்ள சிலரும் அடங்குவதாகவும் எம்.பி.எம். ஸரூக் கூறினார்.

இதுதவிர, ரியாத் பகுதியிலும் 8000க்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்யப்பட்டதாகவும், அவர்களில் பலர் நாடு திரும்பிவிட்டதாகவும், சவுதியின் கிழக்கே உள்ள தம்மாம் பகுதியிலிருந்து பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஜெட்டாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் எம்.பி.எம். ஸரூக் தெரிவித்தார்.

ஜெட்டா பாலத்தின் கீழே கடந்த காலங்களில் தங்கியிருந்தவர்களில் பொதுமன்னிப்புக்கு உட்படாத 35 இலங்கையர்கள் மட்டுமே இப்போது இருப்பதாகவும் ஸரூக் கூறினார்.

நேற்று திங்கட்கிழமை முதல் சவுதியில் நடந்துவரும் தேடுதல்களில் ஜெட்டா பகுதியில் இலங்கையர்கள் இருவர் பிடிபட்டுள்ளதாகவும் அப்படி பிடிபடுபவர்களை 48 மணிநேரத்துக்குள் சொந்த நாட்டுக்கு அனுப்ப சவுதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜெட்டாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் எம்.பி.எம். ஸரூக் தெரிவித்தார்.bbc

Web Design by Srilanka Muslims Web Team