சவூதி அரேபியாவிலிருந்து ஒரு இலட்சம் எதியோப்பியர்கள் நாடு திரும்பினர் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவிலிருந்து ஒரு இலட்சம் எதியோப்பியர்கள் நாடு திரும்பினர்

Contributors

சவுதி அரேபிய அரசு நிடாகட் என்ற புதிய சட்டத்தின் மூலம், அந்நாட்டில் முறையான குடியுரிமை பெறாமல் தங்கியிருந்தவர்களை வெளியேற்றத் தொடங்கியது. பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு ஏழு மாத காலம் கழிந்ததும் சென்ற மாதம் 13 ஆம் தேதி முதல் வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்புவதில் சவுதி அரசு கண்டிப்பு காட்டத் தொடங்கியது. இந்த செயல் எத்தியோப்பியத் தொழிலாளர்களுக்கும், சவுதி காவல்துறையினருக்கும் இடையே வன்முறைகளையும் தூண்டியது.

சவுதியிலிருந்து திரும்பி வந்த எத்தியோப்பியர்களின் எண்ணிக்கை நேற்று இரவுடன் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்னும் 50,000 பேரை எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டெட்ரோஸ் அதுனோம் தெரிவித்தார்.

மேலும், சவுதி காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் தங்கள் நாட்டவர்கள் மூன்று பேர் இறந்துள்ளதாக எத்தியோப்பிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த சவுதி அரசை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், காவலில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மீது மனிதப் பேரழிவுகள் தடுக்கப்படவேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

ஆண்டுதோறும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பான்மையான எத்தியோப்பியர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளைத் தேர்வு செய்கின்றனர். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின்படி பலரும் மோசமான பணி நிலைமைகள், மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம், குறைந்த ஊதியம் மற்றும் பாகுபாடு போன்றவற்றையே எதிர்கொள்ள நேருகின்றது. இத்தகைய அறிக்கைகளைத் தொடர்ந்து சென்ற அக்டோபர் மாதம் முதல் எத்தியோப்பிய அரசும் தங்கள் நாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடி செல்வதற்கு தடை விதித்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team