சஹ்ரானின் சாரதி உட்பட 4 பேர் பிணையில் விடுவிப்பு! - Sri Lanka Muslim

சஹ்ரானின் சாரதி உட்பட 4 பேர் பிணையில் விடுவிப்பு!

Contributors

 

மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் பயங்கரவாத தடைச் சட்த்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சாரதி உட்பட 4 பேரை இன்று  (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா தலா ஒருவருக்கு 35 ஆயிரம் ரூபா பணமும் 10 இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீரப் பிணையிலும் கடவு சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு நிபந்தனையுடன் பிணையில் விடுவித்துள்ளார்.

கடந்த 2018-11-29 திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச்சாவடியில் இரு பொலிசாரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் 2019 ம் ஏப்ரல் உயிர்த ஞாயிறு குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பாக 2019 ஏப்ரல் 29 ம் திகதி சஹ்ரானின் கார் சாரதியான கபூர் மாமா என்றழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை, அப்துல் மனாப் மொஹொமட் பீர்தௌஸ், ஹம்சா மொஹொதீன் மொஹொமது இம்ரான், ஹய்யாது மொஹொமட் மில்ஹான் ஆகிய நான்கு பேரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

இந்த நிலையில் இன்று (26) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சிறைச்சாலையில் இருந்து பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு இவர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம். முகமட் அமீன் இவர்களை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் கோரிய நிலையில் இவர்களை எதிர்வரும் ஜனவரி 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.

கனகராசா சரவணன்

Web Design by Srilanka Muslims Web Team