சஹ்ரானிற்கு உதவிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் உறவை வைப்பவர்கள் அரசாங்கத்திலே உள்ளனர்..! - Sri Lanka Muslim

சஹ்ரானிற்கு உதவிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் உறவை வைப்பவர்கள் அரசாங்கத்திலே உள்ளனர்..!

Contributors

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் வேலை செய்யத் தயாராக இருக்கும் அரசியல் கயவர்கள் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்குள் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, அதன் நீதிபதிகள் வழங்கியுள்ள இறுதி பரிந்துரையின்படி கலகொட அத்தே ஞானசார தேரர் காரணமாகவே சஹ்ரான் உருவாகியுள்ளார்.

அப்படியானால், ஞானசார தேரர் காரணமாகவா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவாகியது?.றிசார்ட் பதியூதீனின் தம்பி, சஹ்ரானை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விதம், சஹ்ரானின் தொலைபேசி அழைப்பின் பின்னர், அவர் அண்ணனைத் தொடர்பு கொண்ட விதம் பற்றி நாங்கள் கூறவில்லை.

பொலிஸாரே , கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இதனைக் கூறினர். எம்மிடம் கூறவில்லை கர்தினாலிடம் கூறினர். கைது செய்யப்பட்டிருந்த போது, வியாபாரம் சம்பந்தமாக தொலைபேசி அழைப்பை எடுத்ததாக றிசார்ட் பதியூதீன் தம்பி கூறியுள்ளார்.

விடுதலை செய்ய வேண்டும் என்பதால், அந்த தொலைபேசி அழைப்பானது வர்த்தக நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டதாக மாறியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சஹ்ரானின் ஆவி இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.எதிர்காலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்து வேலை செய்யும் நபர்களும் அரசாங்கத்தில் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் அதற்காகத் தயாராக இருக்கும் நபர்களும் இருக்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் உறவை வைத்துக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்த அரசியல் கயவர்கள், ஒரு விதத்தில் அடிப்படைவாதத்தை ஆரம்பித்து, றிசார்ட் பதியூதீன் போன்றவர்கள் உண்மையான சுயரூபம் சமூகத்திற்கு வெளியாவதை தடுத்துள்ளனர் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் விமல் வீரவங்ச தனக்கு எதிராகச் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுச் சம்பந்தமாகவும் வீரவங்சவுக்கு எதிராக றிசார்ட் பதியூதீன், குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team