சாய்ந்தமருதில் பாசிசம் ஓங்குகிறது - வபா பாறுக்கின் நேர்காணல் » Sri Lanka Muslim

சாய்ந்தமருதில் பாசிசம் ஓங்குகிறது – வபா பாறுக்கின் நேர்காணல்

wafa66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிழக்கின் எழுச்சி, கிழக்கு தேசம் அமைப்புகளின் ஸ்தாபகர் வபா பாறுக்குடனான நேர்காணல்

கேள்வி:
கடந்த வெள்ளிக்கிழமை உங்கள் இல்லத்தில் நடந்த அசம்பாவிதம் பற்றி சற்று கூறுங்களேன்?

பதில்:
அகர ஆயுதம் வெளியீட்டகத்தால் கடந்த 11/11/2017 அன்று வெளியீடு செய்யப்பட்ட ‘முரன்பாட்டு சமன்பாடுகள்’ கவிதை தொகுப்பு மீதான ஒரு கலந்துரையாடல் எனது வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் முஸ்லீம் காங்கிரஸின் பிரதிப்பொருளாலரும் முன்னாள் மாகாண சபை உறுப்பிருமான ஜவாத் அப்துல் ரஸ்ஸாக் அவர்களும் அவரது தம்பியும் எனது நன்பருமான ஷாபி ஹாதீமும் இன்னும் முக்கியமான இலக்கிய நட்புக்களும் கலந்து கொண்டனர்.

மாலை 07.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு தொடர்ந்து கொண்டிருக்கும் போது திடீரென எமது வாசலுக்குள் அத்துமீறி நுழைந்த பெரும் கூட்டமொன்று ஜவாதை வெளியே வருமாறு கோசித்துக்கொண்டிருந்தது. ஜவாத் எனது மைத்துனர்.
ஆகவே அந்த கோசத்தில் எந்த நியாயமும் இருப்பதாக நான் காணவில்லை.
ஜவாதும் வெளியிறங்கவுமில்லை. தவிரவும் அந்த சூழ்நிலையில் ஜவாதுக்கு ஏதாயின் நடந்து விடுமாயின் அது பேரழிவில் போய் முடியும் என்பதால் உடனடியாக பொலீஸ் மற்றும் விஷேட அதிரப்படையை வரவழைத்து ஜவாத் பாதுகாப்பாய் அனுப்பி வைக்கப்பட்டார்.

கேள்வி;
உங்கள் வீட்டுக்கும் சேதமேற்பட்டதா?

பதில்:
ஜன்னல் கண்ணாடியொன்று உடைக்கப்பட்டது. வேறொன்றுமில்லை

கேள்வி:
உங்கள் வாசலுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களின் நோக்கம் எதுவாக இருந்தது? ஜவாதை வெளிவருமாறு ஏன் கோசித்தார்கள்?

பதில்:
அவர்களிடம்தான் அதை கேட்கவேண்டும்.
விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள், அதன் பின்னரான விசாரனையில் அனைத்தும் வெளிவரும்.

கேள்வி:
அவர்கள் சாய்ந்தமருது மக்கள் பணிமனையிலிருந்தே வந்ததாக கூறப்படுகிறதே?

பதில்:
விசாரனையில்தான் தெரியவரும். அத்துமீறியோர் கைதாகும்வரை பொறுத்திருப்போம்.

கேள்வி:
இந்த அசம்பாவிதத்துக்கும் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கைக்கும் தொடர்பிருப்பதாக கூறுகின்றார்களே?

பதில்:
என்ன தொடர்பு?

கேள்வி:
ஜவாத் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கைக்கு எதிராக செயல்பட்டதே காரணம் என்று கூறுகின்றார்களே

பதில்:
ஜவாத் ஒரு மாகாண சபை உறுப்பினராக மட்டுமே இருந்தவர்.
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை கொடுக்கவோ தடுக்கவோ அவரால் முடியும் என நம்புவது அறியாமையின் உச்சம்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை பெறவேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு உள்ள தார்மீக உரிமை போலவே கல்முனையின் பன்நூற்றாண்டுகால முஸ்லீம் பெரும்பாண்மை அடையாளத்தை ஜனநாயக அரசியல் பிரிவினை யதார்த்தங்களுக்கு மத்தியிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என முயல்பவர்களுக்கும் அதைவிட அதிகமாக தார்மீக உரிமை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி அதிகாரம் பெற்றுக்கொள்வதனால் கிடைக்கின்ற அனுகூலங்களுக்காக சரித்திர முக்கியத்துவமிக்க கல்முனையை மாற்றார்களுக்கு தாரைவார்க்க அனுமதிக்க இயலாது என்பது ஜவாதைப்போன்று ஆயிரக்கணக்கானோரின் நிலைப்பாடாகும்.

கல்முனை கட்டிடங்களால் கட்டப்பட்டதல்ல . அது சரித்திரத்தால் செதுக்கப்பட்டது.
அது முஸ்லீம்களின் ஆதி வர்த்தகக்கேந்திரம்
அதை எவரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் இந்நிலைப்பாட்டிலுள்ள எவரும் மற்றவர்களின் வீடு புகுந்து அட்டகாசம் செய்யவில்லை.
மாறாக ஜனாதிபதி உட்பட உரிய மட்டங்களில் தமது வாதத்தையே அறிவு பூர்வமாக முன்வைத்தனர்.

இந்நிலையில் ஜவாதை எனது வீடு புகுந்து இம்சிக்க முனைவது கேவலமான செயலாகும்.

கேள்வி:
ஒரு புறம் சாய்ந்தமருது தனியாக பிரிந்து செல்ல முனைகிறது இன்னொரு புறம் கல்முனையை நான்காக பிரியுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையிலான தீர்வுதான் என்ன?

பதில்:
கல்முனையை நான்காக பிரிக்கவேண்டும் என்பது விருப்பத்துடனான கோரிக்கையல்ல
சாய்ந்தமருது பிரிவினால் ஏற்படும் சமநிலை சிதறலை சீராக்குவதற்கான மாற்று வழியேயாகும்.
அது ஒரு நிர்ப்பந்தக்கோரிக்கை

கல்முனையின் உள்ளூராட்சி இறைமை முஸ்லீம்களில் தங்கியிருக்க வேண்டும் என்ற வரலாற்று நியாயமே நான்காக பிரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு உந்தியுள்ளது.
சாய்ந்தமருது முயற்சிப்பதுபோல் மருதமுனையும் முயற்சித்தால் கல்முனையின் நிலை என்னாகும் என்ற அச்சமே ஒரே நேரத்தில் நான்காக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்க்கிறது.
அது நியாயமான கோரிக்கையே.

ஒரு சாராருக்கு அனுகூலமும் இன்னொரு சாராருக்கு பிரதிகூலமும் ஏற்படச்சாத்தியமான விடையத்தில் மாற்றுக்கருத்துக்களும் வித்தியாசமான நிலைப்பாடுகளும் தவிர்க்க முடியாதவை.
ஆனால், இவற்றை உணர்வுபூர்வமாகவன்றி அறிவுபூர்வமாக அணுகாமையே அத்தனை குழப்பங்களுக்கும் காரணமாகும்.

பாகிஸ்தான் பிரிவினையை காயிதே மில்லத் முஹம்மத் அலி ஜின்னா கோரும் போது அபுல் கலாம் ஆசாத் போன்ற தலைவர்கள் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார்கள்.
ஆனால் அவர்கள் அறிவியல் ரீதியான தளங்களிலேயே இயங்கினார்கள்.
அதனால் அவர்கள் எவரையும் வீடு புகுந்து தாக்கவில்லை.

ஆனால் இங்கோ வடிகட்டிய முட்டாள்களே முன்னிக்கின்றார்கள் அதனால் வீடு புகுந்து அடிப்பதும் உடைப்பதும் நடைபெறுகின்றது.

மாற்றுக்கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் வன்முறையால் ஒடுக்குவதற்கு பெயர் பாசிசம் அது பாரிய அழிவை ஏற்படுத்தும். சாய்ந்தமருதில் பாசிசம் ஓங்கி வளர்கின்றது

Web Design by The Design Lanka